கேப்டன் மில்லர்


தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நேற்று ஜனவரி 12 ஆம் தேதி வெளியான படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன், அதிதி பாலன், நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.


உதயநிதி ஸ்டாலின் பாராட்டு






கேப்டன் மில்லர் படத்தைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டிப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவில் அவர் “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என்று கூறியுள்ளார்.


தனுஷ் நன்றி






இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் உதயநிதி ஸ்டாலிக்கு நன்றி கூறியுள்ளார். “ஒரு நல்ல கலைப்படைப்பை நீங்கள் பார்க்கும் போது எல்லாம் உங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறீர்கள். கர்ணன் படத்தைப் பார்த்து நீங்கள் பாராட்டு மழைகளை பொழிந்தது எனக்கு நினைவிருக்கிறது. உங்களுடைய இந்த பாராட்டு எனக்கும் கேப்டன் மில்லர் படத்திற்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது.” என்று தனுஷ் பதிவிட்டுள்ளார்.