திருச்சிற்றம்பலம் படம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா கடந்த ஜூலை 30 ஆம் தேதி நடைபெற்றது.
பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடிகர் மிர்ச்சி சிவா இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல், விடுதலை ஆகிய படங்கள் முடிந்த பிறகு வடசென்னை 2 ஆம் பாகத்தை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் சிவகார்த்திகேயன் குறித்து தனுஷ் தெரிவித்த விஷயத்தை வெற்றிமாறன் குறிப்பிட்டார். 3 படத்தில் தனுஷின் நண்பர் கேரக்டரில் நடித்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக தனுஷ் தயாரித்த முதல் படமான எதிர் நீச்சலில் ஹீரோவாக நடித்தார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச்சட்டை படத்தையும் தனுஷ் தயாரித்தார். இந்த 2 படங்களையும் துரை செந்தில் குமார் இயக்கியிருந்தார். இவர் இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளர் ஆவார்.
எதிர் நீச்சல் படத்திற்காக வெற்றிமாறனை சந்தித்த போது தனுஷ் உங்கள் உதவியாளர்கள் யாராவது இருந்தால் காமெடி கதை சொல்ல சொல்லுங்கள் என கேட்டார். நான் ஓ காமெடி கதை நடிக்க போறீங்களா என கேட்டேன். அதற்கு எனக்கு இல்லை.சிவகார்த்திகேயனுக்கு என தெரிவித்தார். மேலும் சிவாவுக்கு பயங்கரமான திறமை இருக்கு.. சூப்பர் ஸ்டார் ஆகுறதுக்கான எல்லா தகுதியும் இருக்கு என தெரிவித்ததாக வெற்றிமாறன் தெரிவித்தார்.
காக்கிச்சட்டை படத்தில் இருந்தே தனுஷ், சிவா இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த மாதம் தனுஷின் பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனால் அவர்களின் பிரச்சினை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. இப்போது வெற்றிமாறன் பழைய நிகழ்வு ஒன்றை குறிப்பிட்டதைப் பார்த்த ரசிகர்கள் தனுஷ், சிவா இடையேயான உறவு குறித்து நெகிழ்ச்சியான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்