இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இருப்பதாகவும் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. கனெக்ட் மீடியா மற்றும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க இருக்கும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவிருப்பதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படம் குறித்த அடுத்தகட்ட தகவல்கள் எதுவும் வெளியாகாததால் இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இளையராஜா பையோபிக் கைவிடப்படவில்லை என்றும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவில்லை என்றும் புதிய இயக்குநர் ஒருவர் படத்தை இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது 

Continues below advertisement

இளையராஜா பையோபிக்கில் இருந்து விலகிய அருண் மாதேஸ்வரன்

தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் முன்னதாக இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். இவர் இயக்கிய ராக்கி , சாணி காயிதம் , கேப்டன் மில்லர் ஆகிய மூன்று படங்களும் த்ரில்லர் வகையைச் சேர்ந்தவை. இளையராஜா வாழ்க்கை வரலாற்றை அருண் மாதேஸ்வரன் இயக்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியானது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவரால் இப்படி ஒரு ஜாம்பவானின் வாழ்க்கையை முழுமையாக காட்ட முடியுமா என்கிற கேள்வி அனைவருக்கும் இருந்தது. படத்திற்கான திரைக்கதை பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இளையராஜா பையோபிக்கில் இருந்து விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி படத்தை இயக்கி வருகிறார் அருண் மாதேஸ்வரன். 

படப்பிடிப்பு எப்போ

தனுஷ் தற்போது போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தபடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். சாய் பல்லவி , ஶ்ரீலீலா இப்படத்தில் நடிக்க உள்ளனர். சாய் அப்யங்கர் இசையமைக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் இளையராஜா பையோபிக் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் படத்தின் புது இயக்குநர் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கின்றன. 

Continues below advertisement

இளையராஜா தவிர்த்து ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். ஓம் ராவத் இந்த படத்தை இந்தியில் இயக்கவிருக்கிறார். 2027 ஆம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.