நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 18) அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் “ஜகமே தந்திரம் ” இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பலரின் பாராட்டை பெற்று வருகிறார் நடிகை ஐஷ்வர்யா லட்சுமி . பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதி செய்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் துள்ளல் இசையமைத்திருக்கிறார். ரகிட ரகிட பாடல் குத்தாட்டம் போட வைத்தாலும் புஜ்ஜி பாடல் இடம்பெறவில்லை என்பது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓடிடி தளத்தில் படம் வெளியிடப்படுவதால் படத்தின் இரண்டு பாடல்கள் அதில் இடம் பெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. பாடல்கள் தியேட்டர்களுக்காக உருவாக்கப்பட்டவை, படம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பொழுது பாடல்கள் மீண்டும் இணைக்கப்படும் என படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
நிறவெறி மற்றும் இனவெறியோடு இருக்கும் ஒருவரை தமிழ்நாட்டில் இருந்து செல்லும் லோக்கல் ரவுடி எப்படி அழிக்கிறார் என்பதை மையமாக வைத்து படத்தின் திரைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் இருந்து புலம் பெயரும் அகதிகள் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கின்றனர் என்பது குறித்தும் விளக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த ஜூன் 18 ஆம் தேதி 190 நாடுகளில் தமிழ் மொழியோடு சேர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், வியட்நாமீஸ்,போர்ச்சுகீஸ், பிரேசிலியன், இத்தாலியன், ஸ்பேனிஸ், பொலிஷ், ஸ்பேனிஸ் ,தாய், இந்தோனேசியன் உள்ளிட்ட 17 மொழிகளில் படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பிரபல டைம்ஸ் சதுக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் புகைப்படம் இடம் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் உலக புகழ் வாய்ந்தது. இது அதிகமான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி மேலும் சிறந்த சுற்றுலா பகுதியாகவும் விளங்குகிறது. இங்குதான் மக்கள் ஒன்றுகூடி புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களை நிகழ்த்துவார்கள் .அதுமட்டுமல்லாமல் உலகின் அனைத்து பகுதியில் இருந்தும் வந்த புலம்பெயர் மக்கள் நியூயார்க் பகுதியில் குடியேறி இருப்பதால் இந்த பகுதி எப்போதுமே களைக்கட்டும். உலக நாடுகளை ஒன்றினைக்கும் ஐக்கிய நாட்டு சபையும் இந்த பகுதியில்தான் உள்ளது. எனவே இது உலக நாடுகளால் நியூயார்க் முக்கியமான பகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கு டைம்ஸ் சதுக்கம் உள்ளது. அங்கு இருக்கும் உயரமான கட்டிடங்களின் சுவர்களில் பொருத்தப்பட்ட ஒளிரும் திரை மூலம் , டிஜிட்டல் விளம்பரங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் இந்நிலையில்தான் ஜகமே தந்திரம் படத்தின் புரமோஷன் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் டைம்ஸ் சதுக்க விளம்பர பலகையில் இடம்பெற்றுள்ளன. இது படக்குழுவினருக்கு மட்டுமல்லாமல் தனுஷ் ரசிகர்களுக்கும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.