நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக கவனம் பெற்ற மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ‘மாமன்னன் ’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் முக்கிய வேடத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் நாளை (ஜூன் 29) தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ரசிகர்களை விட ஒட்டுமொத்த திரையுலகமும் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதேசமயம் கடந்த ஜூன் 16 ஆம் தேதி மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.


இதற்கிடையில் இந்த படத்திற்கு எதிர்ப்புகளும் எழத் தொடங்கியுள்ளது. படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடைபெறும் என மிரட்டல் வெளியாகியுள்ளது. படத்துக்கு தடைக் கேட்டு தொடரப்பட்ட வழக்கில், தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனிடையே மாமன்னன் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 


இதனிடையே மாமன்னன் படத்தைப் பார்த்த தனுஷ்,, படம் குறித்த விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “மாரி செல்வராஜின் மாமன்னன் படம் பார்த்த நெகிழ்ச்சியாக உள்ளது. மாரியை கட்டியணைத்து பாராட்டுகிறேன். வடிவேலு மற்றும் உதயநிதி தரமான நடிப்பை வழங்கியுள்ளனர். அதேபோல் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபஹத் ஃபாசில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். இடைவேளை காட்சியில் தியேட்டர்கள் தெறிக்கும். இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் சார் அழகு” என பாராட்டி தள்ளியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தனுஷின் இந்த பதிவுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தனுஷ் பதிவை குறிப்பிட்டு ”எல்லாவற்றுக்கும் நன்றி.உங்கள் ஆதரவு இல்லாமல் மாமன்னன் நிகழ்ந்திருக்காது’ என உதயநிதி கூறியுள்ளார்.