நடிகர் தனுஷ் தொடர்ந்து வெரைட்டியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், இவர் நடித்த சில படங்கள் இவருக்கு கை கொடுத்த போதிலும்... கேப்டன் மில்லர், நாளை வருவேன், ஜகமே தந்திரம், போன்ற படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது.

இந்தநிலையில் தற்போது 'ராயன்' படத்தின் வெற்றிக்கு பின்னர், தனுஷ் தெலுங்கு பட இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'குபேரா'. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க,  நாகார்ஜுனா, ஜிம் சார்ப், தலிப் தாஹில் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிக்கீத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.  தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

நாளை உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் படு தூளாக நடந்த போதிலும், தமிழகத்தை பொறுத்தவரை 'குபேரா' படத்தின் முன்பதிவு மிகவும் மந்தமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

பல திரையரங்குகளில் 'குபேரா' படம் ஹவுஸ் ஃபுல் ஆகாமல் உள்ளதாகவும், இதன் காரணமாக இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சற்று அப்செட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரூ. 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு தமிழக உரிமையை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 'குபேரா' படத்தை வெளிநாட்டில் நடந்த பிரீமியர் ஷோவை பார்த்த பிரபல திரைப்பட விமர்சகர்  உமர் சந்து, தன்னுடைய முதல் விமர்சனத்தை கூறி உள்ளார். இந்த படத்திற்கு பாசிட்டிவாக இவர் விமர்சனம் கூறியுள்ளதால் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.  இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது....

உமர் சந்து பதிவு: "மிகவும் பவர்ஃபுல்லான க்ரைம் திரில்லர் திரைப்படமாக குபேரா உள்ளது.  நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, ஆகியோர் தங்களுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அனைவரையும் கவரும் விதத்தில் கதைக்களம் உள்ளது. கிளைமேக்ஸ் இந்த படத்தின் உயிர் நாடியாக இருக்கிறது. அமீர்கான் போன்ற நடிகர்கள், தனுஷிடம் இருந்து எப்படி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என தெரிந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல் கண்டிப்பாக இப்படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும் என கூறி, 5-க்கு 3.5 மதிப்பீடு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.