நடிகர் தனுஷின் ‘ஓம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், நெல்லையில் அவரது ரசிகர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை ஃபிரேமாக எடுத்துக்கொண்டு, அதனுடன் நடனமாடி ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்
‘ஓம்’ படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் ‘TN 58 CM 2031’ என்ற வாசகத்துடன் கூடிய பேனரை ரசிகர்கள் வைத்திருந்தனர். இந்த வரிசையில், நெல்லையில் தனுஷ் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை ஃபிரேமாக உருவாக்கி, அதனை ஏந்தியபடி ரசிகர்கள் நடனமாடியுள்ளனர்.
தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. தனது ரசிகர் மன்றத்தை ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என மறுசீரமைத்தது, ரசிகர்களை நலத்திட்டப் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த விவாதத்திற்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. மேலும், ரசிகர்களுடனான சந்திப்புகளும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.
இருப்பினும், தனுஷ் இதுவரை அரசியலுக்கு வருவது குறித்தோ, அரசியல் கட்சி தொடங்குவது குறித்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ‘ஓம்’ திரைப்படத்தில் அரசியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளனவா என்ற கேள்விக்கும் பதிலளித்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, படத்தில் அரசியல் செய்தி எதுவும் இல்லை என்றும், பொதுமக்களுக்கான ஒரு செய்தி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஓம்
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நவம்பர் 20ஆம் தேதியான இன்று படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
