நடிகர் தனுஷ் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் கமிட் ஆகியிருக்கும் படத்திற்கு வாத்தி என பெயரிடப்பட்டுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கோலிவுட் மட்டுமல்லாது , பாலிவுட் ஹாலிவுட் என கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகர் தனுஷ். குறிப்பாக அம்பிகாபதி திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் அதீத ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகர் என்ற அந்தஸ்தையும் தனுஷ் பெற்றுள்ளார். பாலிவுட்டின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் கூட்டணி அமைக்கும் தனுஷ் தற்போது அக்ஷய் குமார் , சாரா அலிகானுடன் இணைந்து அட்ராங்கி ரே என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழிலும் டப் செய்து வெளியாகவுள்ளது. வருகிற கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேராடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
படத்தின்ப் புரமோஷன் வேலைகளில் ஈடுப்பட்டுள்ளனர் படக்குழுவினர். இதற்காக மும்பை சென்ற போது எடுக்கப்பட்ட தனுஷின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டை தொடர்ந்து தற்போது டோலிவுட்டிலும் தனுஷ் கால் பதிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை நேற்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதில் டைட்டில் இன்று வெளியாகும் என தனுஷ் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று தமிழ், தெலுங்கு மொழிகளில் மோஷன் டைட்டில் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். படத்திற்கு வாத்தி என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். 2010ம் ஆண்டு வெளியான சினேக கீதம் படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகமானார் வெங்கி அட்லூரி. அதையடுத்து 2018ஆம் ஆண்டு தோழி பிரேமா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதையடுத்து 2019 ஆம் ஆண்டு இவர் இயக்கிய மிஸ்டர் மஜ்னு பெரும் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ், நிதின் நடிப்பில் வெளியான ரங் தே படத்தையும் இவர் இயக்கி இருந்தார்.
தனுஷ் நடிப்பின் வரிசையில், தற்போது மாறன், திருசிற்றம்பலம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட தமிழ் படங்களும் தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படமும் உள்ளன.