நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக புதிய கொடியை அறிமுகப்படுத்தியதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவின. ரசிகர் மன்ற நிர்வாகிகள் கார்களில் தனுஷின் சின்னத்துடன் கூடிய கொடிகள் கட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து, இது தனுஷின் அரசியல் வருகைக்கான முதல் படியா என்ற விவாதமும் தொடங்கியது. தமிழக அரசியலில் திரைப்பட நட்சத்திரங்களின் வருகை தொடர்ந்து பேசப்படும் சூழலில், இந்த தகவல் மேலும் கவனத்தை ஈர்த்தது.

Continues below advertisement

குறிப்பாக சமீப ஆண்டுகளில் சினிமா மற்றும் அரசியல் இடையேயான தொடர்பு மீண்டும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தல் அரசியலில் களமிறங்கியிருக்கும் நிலையில், அடுத்ததாக எந்த முன்னணி நடிகர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. இந்தப் பின்னணியில்தான் தனுஷின் ரசிகர் மன்ற கொடி தொடர்பான தகவலும் அரசியல் கோணத்தில் பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த விவகாரம் குறித்து தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் சுப்பிரமணியம் சிவா விளக்கம் அளித்துள்ளார். "இந்தக் கொடி நேற்று அல்லது இன்று உருவாக்கப்பட்டதல்ல. கடந்த 15 ஆண்டுகளாகவே தனுஷ் ரசிகர் மன்றத்தினர் குடும்ப திருமணங்கள், காது குத்து விழாக்கள், திரைப்பட வெளியீடுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அலங்காரக் கொடியாக இதே கொடியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்" என்று அவர் கூறினார்.

Continues below advertisement

மேலும், "ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ரசிகர் மன்றப் பொறுப்புகள் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் சில ரசிகர்கள் பழைய கொடியையே மாற்றியமைத்து கார் கொடியாக தயாரித்து கொண்டு வந்தனர். அதை நிர்வாகிகளின் கார்களில் பொருத்தியிருந்தனர். இதைப் பார்த்த சிலர் அது புதிய கொடி என்றும், தனுஷின் அரசியல் பயணத்திற்கான அடித்தளம் என்றும் தவறாக புரிந்துகொண்டனர். அதில் எந்த உண்மையும் இல்லை" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.