தனுஷ் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி நடைபோட்டு வருகிறது. ரிலீஸாகி மூன்று வாரங்கள் ஆன நிலையில் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் ஷோக்களை கொடுத்து வரும் இந்த திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் இந்த அளவுக்கு கலெக்ஷன் இதுவரை வந்ததில்லை. திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலகளவில் 110 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 80 கோடி ரூபாய் வசூலித்து தனுஷின் கேரியரில் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக உருமாறியுள்ளது.
அனைத்து தரப்பினரிடமிருந்தும் இந்த திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை வந்து கொண்டிருக்கின்றன. தனுஷின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக தற்போது திருச்சிற்றம்பலம் இருக்கின்றது. ரிலீசுக்கு முன்பு பெரிய அளவில் எதிர்பார்க்கப்படாத படம், அதன் துல்லியமான மற்றும் ரசிக்க வைக்கும் திரைக்கதையால் ரசிகர்கள் மனதை ஈர்த்து பாக்ஸ் ஆபிஸை நிரம்பச் செய்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் 51 கோடி வசூல் செய்திருந்தது தனுஷ் கேரியரில் அதிக வசூல் படைத்த திரைப்படமாக இருந்து வந்தது. கர்ணனின் வசூல் சாதனையை முறியடித்து நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது திருச்சிற்றம்பலம் திரைப்படம்.
தனுஷ் நடிப்பில் வெளியான "யாரடி நீ மோகினி", "உத்தம புத்திரன்", "குட்டி" உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர்,ராஷி கண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் படம் வெளியானது.