நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். பிரியங்கா மோகன் மற்றும் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இளைஞர்களை மையப்படுத்திய ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் இது ஒரு சாதாரண காதல் கதை என்றே தனுஷ் தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்த டிரைலரிலும் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் இது ஒரு சாதாரண காதல் கதை என்றே பிராண்ட் செய்துள்ளார்.
இரு காதலர்களுக்கு பிரேக் அப் ஆன பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார். இருவரும் வெவ்வேறு நபர்களை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். தனது எக்ஸ் இன்னொருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதை தெரிந்துகொள்ளும் நாயகனின் மனம் தனது தற்போதை காதலி மற்றும் முன்னாள் காதலி இடையில் ஊசலாடுகிறது. நாயகனின் நண்பனாக மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் நடித்துள்ள நிலையில் சரண்யா பொன்வண்ணன் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷின் பாடல்கள் ஏற்கனவே பரவலான கவனம் பெற்றுள்ள நிலையில் படத்தின் பின்னணி இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார்.
ரொம்ப சீரியஸான கதையாக இல்லாமல் மக்கள் ஜாலியாக பார்த்து ரசித்துவிட்டு செல்லும் ஒரு படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.