தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு:


நீண்ட நாட்களாக படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், போர்க்களத்திற்கு மத்தியில் ஏராளமான உடலுக்கு நடுவேயும், கையில் ஆயுதமேந்தி நீளமான முடி மற்றும் ரத்த காயங்களுடன் தனுஷ் மாஸ் ஆக நின்று போஸ் கொடுத்துள்ளார். இதுதொடர்பான பதிவில் “சுதந்திரம் தான் மரியாதை” என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.






 


அருண் மாதேஸ்வரனுடன் கூட்டணி


வாத்தி படத்தில் நடித்ததை அடுத்து சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.


ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.  இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகலாம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். முன்னதாக நடிகர் தனுஷூம் இந்த அறிவிப்பு குறித்து ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் தான், கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனால், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.


படக்குழு:


கேப்டன் மில்லர் படத்தில் கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன்,  நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் பெரிய வெற்றி பெறாததை தொடர்ந்து, கேப்டன் மில்லர் படத்தை தனுஷ் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். 


தனுஷின் அடுத்த படம்


நடிகர் தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு,  மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான கால்ஷீட்டை ஏற்கெனவே தனுஷ் கொடுத்துவிட்ட நிலையில், மற்றொருபுறம் மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D50 படத்தினை தனுஷ் தானே இயக்கி நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை நடப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.