2008 ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியாகி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியைப் பெற்ற யாரடி நீ மோகினி படம் இன்றோடு வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. 


செல்வராகவனின் மேஜிக் திரைக்கதை


பொதுவாக காதல் படங்களில் செல்வராகன் படங்கள் தனித்துவமானவை. அந்தப் படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் மனதை பாதிக்கக் கூடியதாக அமையும். அதே சமயம் செல்வராகவனால் மனதுக்கு மிக நெருக்கமான காதல் காட்சிகளை அமைக்க முடியுமா என நிரூபித்த படம் தான் யாரடி நீ மோகினி. தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே படத்தை அவரது உதவி இயக்குநராக பணியாற்றிய மித்ரன் ஆர் ஜவகர் தமிழில் யாரடி நீ மோகினி ஆக ரீமேக் செய்தார். 


இந்த படத்தில் நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்திருந்தனர். மேலும் மறைந்த பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத், கருணாஸ், கார்த்திக் குமார், ரகுவரன், சரண்யா மோகன்,சுகுமாரி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் இணைந்திருந்தனர். இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்த நடிகர் தனுஷூக்கு பேமிலி ஆடியன்ஸ் ரசிகர்கள் இந்த படத்தில் கிடைத்தனர். 


இந்த படத்தின் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இன்றளவு ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒன்றாக உள்ளது. பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பரான குடும்ப திரைப்படங்களில் ”யாரடி நீ மோகினி”யும் இடம் பெற்றுள்ளது. 


படம் உருவான கதை


அதிரி புதிரியான வெற்றியைப் பெற்ற யாரடி நீ மோகினி படம் உருவானதே தனிக்கதை. அதனை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் கூறியுள்ளார்.  அதில் படம் ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே படத்தின் ரீமேக் என சொல்ல முடியாது. காரணம் அந்த படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே தமிழில் தனுஷை வைத்து படம் தயாரிக்க அவரது அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரிராஜா முடிவு செய்து இருந்தார். அப்போது செல்வராகவன் தான் என்னை அடையாளம் காட்டினார். மேலும் ஆடவாரி கதையும் தமிழுக்காக எழுதியது என சொல்லி முழு கதையையும் ஒப்படைத்தார்.


எனக்கு சிறு வயதில் இருந்தே ரகுவரனை பிடிக்கும். அதனால் தனுஷின் அப்பா கேரக்டருக்கு அவர் தான் வேண்டும் என அடம் பிடித்து வாங்கினேன். அதுமட்டுமல்லாமல் முதல் படத்திலேயே தனுஷ், நயன், கே.விஸ்வநாத், ரகுவரன் என முன்னணி பிரபலங்களை இயக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது என மித்ரன் தெரிவித்துள்ளார். 


ரகுவரன் இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு பிடிச்சிருக்குன்னு சொன்னார். மேலும் அம்மாவை இழந்த தன் மகனிடம் காட்டும் அன்பு, அக்கறை, கடைசிக் காலத்தில் கூட தன் சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கை என அப்பா’க்களின் கேரக்டரை அப்படியே பிரதிபலித்திருந்தார். துரதிஷ்டவசமாக இதுவே அவரின் கடைசிப் படமாகவும் அமைந்தது. 


படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் உருவாக்கமும் கதைக்கு தேவைப்படாமல் இருந்ததில்லை. குறிப்பாக கருணாஸ் நடித்த அந்த டெலிபோன் காமெடி இன்றும் ரசிகர்கள் திரையில் கண்டால் தங்களை மறந்து சிரிப்பார்கள். ஆனால் இந்த காட்சியை தெலுங்கில் சுனில் பண்ணியிருந்த நிலையில் செல்வா தான் கருணாஸை ரெஃபரன்ஸ் செய்தார். அதேபோல் நயன்தாரா நடிக்க வேண்டும் என நானும் தயாரிப்பாளரும் சேர்ந்து தான் முடிவெடுத்தோம். முதலில் அவரோடு நடிக்க தனுஷ் யோசித்தார். ஆனால் படத்தில் பாஸ் கேரக்டர். அதனால் அவர் பொருத்தமாக இருப்பார் என நடிக்க வச்சோம் என மித்ரன் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.