கேப்டன் மில்லர் படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என சுமார் 3500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் கேப்டன் மில்லர். குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்காக போராடும் ஒரு போராளியின் கதையாக கேப்டன் மில்லர் உள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்கலை தவிர சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களை தவிர கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 19ம் தேதியுடன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தனுஷின் பிறந்த நாளை ஒட்டி ஜூலை 28ம் தேதி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் துப்பாக்கி குண்டுகளின் சத்தமும், சண்டை காட்சிகளுமே இடம்பெற்றிருந்தன. டிசம்பர் 15ம் தேதி கேப்டன் மில்லர் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை ரஜினி நடிப்பில் உலகமெங்லும் ஜெயிலர் படம் வெளியாகிறது. இதையொட்டி கேப்டன் மில்லர் குறித்த அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் சுமார் 3500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் ஒளிபரப்பாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஜெயிலர் படத்துக்கு மிகுந்த வரவேற்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து திரையரங்குகளிலும் கேப்டன் மில்லர் படத்தின் டீசரை ஒளிபரப்ப படக்குழு திட்டமிட்டிருப்பது, புரோமோஷனின் உச்சத்தை காட்டுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மாமனார் நடித்த படத்தின் ரிலீஸில் மருமகன் நடிக்கும் படத்தின் டீசரா என கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக ஜெயிலர் ரிலீசை ஒட்டி டிவிட்டரில் இது ஜெயிலர் வாரம் என தனுஷ் பதிவிட்டிருந்தார். வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் ரிலீசாக உள்ளது. இது தவிர கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் ஒரு படம், டி51, கலாநிதிமாறன் தயாரிப்பில் ராயன், தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் நடிக்க தனுஷ் கமிட்மெண்ட் கொடுத்துள்ளார்.