பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கபாலி. படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, கிசோர் குமார், தாய்வான் நடிகர் வின்சுடன் சாவோ, ராதிகா ஆப்தே, தன்சிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்தனர்.  


இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, ஹொங் கொங் போன்ற நாடுகளிலும் பாங்கொக் நகரிலும் நடைபெற்றது. கபாலி இந்தியாவில் மட்டும் 3200 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இவற்றில் தென்னிந்தியாவில் 2200 அரங்குகளில் திரையிடப்பட்டது. உலக அளவில் அதிக வசூலான இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் பெற்றது. படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.


கதையின் கரு:


மலேசியாவில் தோட்டத் தொழிலாளர் களாக இருக்கும் தமிழர்களுக்காகப் போராடும் கபாலீஸ்வரன் (ரஜினி), ஒரு கட்டத்தில் மக்களுக்காக கேங்ஸ்டர் ஆகிறார். கொடூரமான மாபியா சம்ராஜ்யம் நடத்தும் டோனி லீ (வின்ஸ்டன் சாவோ) என்கிற சீனன், கபாலியைத் தீர்த்துக்கட்டப் பொறி வைக்கிறான். அந்த மோதலால் கபாலி சிறைக்குப் போக, நிறைமாத கர்ப்பிணியான அவர் மனைவி (ராதிகா ஆப்தே) என்ன ஆனார் என்பது தெரியவில்லை.


25 வருடங்களுக்குப் பின் விடுதலை ஆகும் கபாலி தன் எதிரிகள் மேலும் வளர்ந்து மாபெரும் சமூக விரோத சக்திகளாக இருப்பதைப் பார்க்கிறார். அவர்களை ஒடுக்குவதற்காகக் களம் இறங்குகிறார். இதற்கிடையில் தனது மனைவி உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்னும் தேடலும் தொடர்கிறது. 


விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், ரஜினியின் கெட்டப் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது கபாலி. கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித், தயாரிப்பாளர் தாணு ஆகியோர் நடிகை ராதிகாவுடன் நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று இணையத்தில் இப்போதும் கவனம் பெற்றதாக இருக்கிறது.


அந்தப் பேட்டியில் தாணு பேசுகையில், ”கபாலி படம் வெளியான பின்னர் ரஜினி எனக்கு ஃபோன் செய்தார். தாணு நம்ம ரெண்டு பேருக்கும் எத்தனை வருடப் பழக்கம் இருக்கும் என்றார். நான் 35 ஆண்டுகள் என்றேன். இந்த 35 ஆண்டுகள் நம் நட்பில் கபாலி ஒரு மகுடம் என்றார். எனக்கு அப்படியே புல்லரித்துவிட்டது. அந்தப் படத்தில் அவர் பேசிய கபாலி டா என்ற ஒரே ஒரு டயலாக் பட்டி தொட்டியெல்லாம் பரவலாகிக் கிடக்கிறது. இந்தப் படத்தை ரஜினி அவ்ளோ ரசிச்சு ஈடுபாடோடு செய்து கொடுத்தார். நைட் ஷிஃப்ட் நடிப்பார். இரவு 8 மணிக்கு வந்துட்டு காலை 4 மணிக்குச் செல்வார். எனக்கு ரொம்ப பதற்றமாக இருக்கும். ஆனால் ரஜினியோ இல்லை தாணு பசங்க ரொம்ப எந்தூசியாஸ்டிக்கா இருக்காங்க அதனால் வளர்த்துவிடுவோம் என்பார். ஆச்சர்யமாக இருக்கும். அதுபோலத் தான் மலேசியாவில் அவருக்கு மக்கள் காட்டிய அன்பு. சூட்டிங் ஸ்பாட் எங்கிருந்தாலும் தேடி வந்திடுவாங்க. ஒரு நாள் நாங்க ஸ்பாட்டுக்கு போறோம் சரியான மழை. காரில் இருக்கிறோம். ஆனால் ரஜினியைப் பார்க்க 4000 பேர் ஒதுங்கக் கூட இடமில்லாமல் மழையில் நனைந்தபடி நிற்கிறாங்க. ரஜினி அது பார்த்துட்டு ரொம்ப ஃபீல் ஆகிட்டார். எப்படி தாணு இது சாத்தியம். நான் இவங்களுக்கு என்ன செஞ்சேன்னு கண் கலங்கிட்டாரு. ரஞ்சித்த கூப்பிட்டு இனிமேல் மக்கள் வராத இடமா பார்த்து சூட்டிங் வைங்க. என்னால் அவர்கள் இப்படியெல்லாம் கஷ்டப்படக்கூடாது” என்றார்.