2015ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஹாரர் திரைப்படம் ‘டிமான்டி காலனி’. இப்படத்தின் இரண்டாம் பாகமான டிமான்டி காலனி 2 (Demonte Colony 2) விரைவில் வெளியாக உள்ளது. 


பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன், வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தொடர்ந்து நேற்று வெளியான ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தது.


இந்நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது:


“மக்களுக்கு ஹாரர் படங்கள் பிடிக்கிறது. டிமான்டி காலனி அருள்நிதி - அஜய் ஞானமுத்து டீம் மீண்டும் ஒரு படம் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். அவர்கள் சராசரி படமாக இதைச் செய்யவில்லை. படத்தில் வரும் கதை அழுத்தமானது. அதே டெக்னிகலாக இதுவரை பார்த்திராத உலகம் சவுண்டிங், சிஜி எல்லாமே உலகத்தரம். ஆதலால் நாங்கள் இதில் இணைந்து கொண்டோம். இந்தப் படம் பார்க்கும்போது இந்த புதிய உலகத்தை நீங்கள் ரசிப்பீர்கள். ஒரு சின்ன அறிமுகம் தான் இந்த டிரெய்லர், இன்னும் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது” என்றார்.


நடிகர் அருண் பாண்டியன் பேசுகையில், “இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் பாபி மற்றும் மனோவிற்கு என் நன்றி. இந்தக்கதையை அஜய் சொன்ன போது மிகவும் உணர்வுப்பூர்வமான கதாப்பாத்திரம், “நான் ஓகேவா” என்று கேட்டேன். “நீங்கள் தான் வேண்டும்” என்றார். அருள்நிதி ஃபிரண்ட்லியாக இருந்தார். பிரியாவுடன் அவருடன் பழகியது வீட்டில் இருப்பது போல் உணர்வைத் தந்தது. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள் எல்லோருக்கும் நன்றி” எனப் பேசினார்.  


நடிகர் முத்துக்குமார் பேசுகையில், “அஜய்க்கு என் நன்றி. பொதுவாகக் கதை சொல்லும் போது என் கேரக்டர் என்ன, அது எப்படி பிகேவ் பண்ணும் என்று பார்ப்பேன். அப்படித்தான் நான் முதலில் இப்படத்தில் நடித்தேன். ஆனால் அஜய் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டு, எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லித்தந்தார். அஜய்க்குள் மிகச்சிறந்த நடிகன் இருக்கிறான். அவர் சொன்னது போல் தான் எல்லோரும் நடித்தோம். ஒவ்வொன்றையும் பார்த்துச் பார்த்து செய்துள்ளார். தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். இப்படத்தில் காமெடி உட்பட எல்லாமே சிறப்பாக வந்துள்ளது. படம் புதுசாக இருக்கும். எல்லோருக்கும் நன்றி” என்றார். 


நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசுகையில் “அஜய் சாருக்கு கோப்ரா வாய்ப்பிற்கே நன்றி சொல்ல வேண்டும். இந்த மேடையில் நன்றி சொல்லிக்கொள்கிறேன், எனக்கு ஒரு கைட் மாதிரி இருந்து வருகிறார். டிமான்டி வந்த போது எனக்கு 15 வயது. இப்போது இரண்டாம் பாகத்தில் நான் நடிப்பது பெருமையாக உள்ளது. அருள்நிதி சார், பிரியா மேடம் எல்லோருக்கும் என் நன்றிகள். படத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்” என்றார். 


இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில், “இயக்குநர் அஜய்யிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஒரு இரையைத் தவறவிட்ட மிருகத்திற்குத் தான் அடுத்த இரையில் எவ்வளவு கவனமாக  இருக்குமென்று தெரியும். ஒரு கலைஞனின் படைப்பு தோற்கலாம் கலைஞன் தோற்பதில்லை. இந்தப்படத்தில் அஜய் மிரட்டியிருக்கிறார்.


ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். இந்தப் படத்தில் வேலை பார்ப்பதற்காக வேறு பல படங்கள் நான் செய்யவில்லை, கொஞ்சம் வருத்தம் தான், ஆனால் இறுதியாக படம் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜய் கண்டிப்பாக இப்படத்தில் சிக்ஸர் அடிப்பார். தயாரிப்பாளர் பாபி சார் படத்தைக் காதலித்து ரசித்து தயாரிக்கிறார். இப்படத்தை அவர் பிஸினசாக அணுகவில்லை, ஆத்மார்த்தமாகப் பிடித்துச் செய்கிறார் அவருக்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரும். டெக்னிகல் டீம் இப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சிஜி எல்லாம் அருமையாக வந்துள்ளது. இப்படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது, ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்” என்றார். 


நாயகி பிரியா பவானி சங்கர் பேசுகையில், “உங்கள் ஆதரவு எங்களுக்கு முக்கியம். போன வருடம் இந்தப்படம் ஆரம்பித்தோம் அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. நிறைய நைட் ஷூட் பண்ணினோம், எனக்கு இந்தக் கதாபாத்திரம் தந்ததற்கு அஜய்க்கு பெரிய நன்றி. அருள்நிதி உடன் இரண்டாவது படம் எனக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார்.


அருண் பாண்டியன் சார் உடன் ஷூட்டிங்கில் வீட்டுக்கதைகள் பேசிக்கொண்டிருப்பேன், ஜாலியாக இருந்தது. மீனாட்சி மிக அழகாக நடித்துள்ளார். பாபி சார் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாக இந்தப்படம் அமையும். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக அனைவரையும் மிரட்டும்படி இருக்கும் நன்றி” எனப் பேசியுள்ளார்.