ஏ.ஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கட்ட டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் 2 வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற ' வீரா ராஜ வீரா' பாடல் சிவா ஸ்துதி என்கிற பாடலை மையமாக வைத்து இசையமக்கப்பட்டதாகவும் அனுமதியின்றி ரஹ்மான் இந்த பாடலை பொன்னியின் செல்வன் 2 படத்தில் பயண்படுத்தியுள்ளதாக  கூறி பாரம்பரிய  இசைக்கலைஞர் உஸ்தாத் ஃபயஸ் வசிஃபுத்தீன் டாகர் கடந்த 2023 ஆம் ஆண்டு ரஹ்மானுக்கு எதிராக    நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்  இந்த வழக்கில் ஏ ஆர் ரஹ்மான்  2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்குபடி படி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில் இந்த பணத்தை கட்ட உத்தவிடப்பட்டுள்ளது.

 

ரஹ்மான் தாகர்வாணி மரபால் ஈர்க்கப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார் என்பதை நீதிமன்றம் குறிப்பிடுகிறது. இது வெறும் உத்வேகமா அல்லது பதிப்புரிமை மீறலா என்பதை தீர்மாணிப்பது இந்த வழக்கில் முக்கிய கருதுகோளாக இருந்தது. இரண்டையும் தெளிவாகப் பிரிப்பது எளிதல்ல. இந்துஸ்தானி பாரம்பரிய இசையில், இசையமைப்புகள் எழுதப்படலாம் அல்லது எழுதப்படாமல் இருக்கலாம். எனவே, இசையின் உண்மையான ஒலி அல்லது வாய்மொழி வெளிப்பாடு தீர்மானிக்கும் காரணியாக இருந்தது. இசையமைப்பாளரின் எழுத்துப்பூர்வ அறிக்கையில், இரண்டு இசைத் துண்டுகளின் ஒப்பீடுகளும்  வழங்கப்பட்டுள்ளது, இரு  குறிப்புகள் ஒரே மாதிரியானவை என்பதைக் காட்டுகிறது. இந்த விஷயத்தை ஆராய்ந்த பிறகு, சர்ச்சைக்குரிய இசையமைப்பு அசல் படைப்பால் ஈர்க்கப்பட்டதோ அல்லது அடிப்படையாகக் கொண்டதோ அல்ல - இரண்டும் ஒரே இசைக் கோர்ப்புதான் என்கிற் முடிவுக்கு நீதிமன்றம் வந்துள்ளது.

 

இளையராஜா காப்புரிமை விவகாரம்

சமீபத்தில் அஜித்  நடித்த குட் பேட் அக்லி படத்தில் அனுமதியின்றி இளையராஜா இசையமைத்த பாடல்கள் பயண்படுத்தியதால் இளையராஜா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அனுமதியில்லாமல் பாடலை பயண்படுத்தியதற்காக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் திரைத்துறையில் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஏ.ஆர் ரஹ்மான் காப்பிரைட் சர்ச்சையில் சிக்கியுள்ளது மற்றொரு அதிர்ச்சி தகவலாக வந்துள்ளது. 

தக் லைஃப்

ரஹ்மான் தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கமல் , சிம்பு , த்ரிஷா , அபிராமி , அசோக் செல்வன் , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜூன் 5 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.