மருத்துவரின் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜார்வால் குற்றவாளி என டெல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 


டெல்லி மாநிலத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்களில் ஒருவராக பிரகாஷ் ஜார்வால் என்பவர் உள்ளார். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி டெல்லியில் உள்ள துர்கா விகார் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சிங் என்ற 52 வயது மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த தற்கொலை முடிவுக்கு முன்னால் அவர் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். 


தற்கொலை குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் தனது தற்கொலைக்கு காரணம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பிரகாஷ் ஜார்வால் என ராஜேந்திர சிங் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் பிரகாஷ் ஜார்வால் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 


விசாரணையில் டாக்டர் ராஜேந்தர் சிங்கின் மகன் ஹேமந்த் சிங்  2005 ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் டேங்கர் மூலம் தண்ணீர் சப்ளை செய்ததாகவும், அதற்கு பிரகாஷ் ஜார்வால் மற்றும் அவருடைய உதவியாளர்கள்  2 பேர் தொடர்ந்து பணத்திற்காக தன்னை துன்புறுத்தியதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே. நாக்பால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பிரகாஷ் ஜார்வால் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை தன்மை இருப்பதாக கூறி 3 பேரை குற்றவாளி என தீர்ப்பளித்தார். இந்த வழக்கின் தண்டனை தொடர்பான விவரங்கள் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வழக்கில் எம்.எல்.ஏ., பிரகாஷ் ஜார்வால் மற்றும் நாகர் ஆகியோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஹரிஷூக்கு  அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 


இந்நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜார்வால், ‘இந்த வழக்கின் விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை. மேலும் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்வேன்’ என தெரிவித்துள்ளார்.