பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சிறந்த நடிகைக்கான குளோபல் அச்சீர்வர்ஸ் விருதைப் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதைப் பெறும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
குளோபல் அச்சீவர்ஸ் பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அமேசான் நிறுவனர் ஜெ பெசோஸ், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் தீபிகா படுகோனேவும் இடம்பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலியின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் தீபிகா படுகோனே. படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலமாக தனக்கென தனியாக ஒரு ரசிகர் பட்டாளத்தையே அவர் கட்டிவைத்திருக்கிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார் தீபிகா படுகோன்.
புகழின் உச்சிக்கு சென்ற அவர் பாலிவுட் பிரபலமான ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்து கொண்டார். அண்மையில் கூட தனது திரைக்குருவான சஞ்சய் லீலா பன்சாலியின் பைஊ பார்வா படத்தில் நடிக்க கணவருக்கு நிகராக தனக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி படத்திலிருந்து வெளியேறினார். அவர் பாலிவுட்டில் துணிச்சலான நடிகையாகவே அறியப்படுகிறார்.
அதேபோல், சமீபத்தில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பேசிய அவர் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் பற்றி பேசினார்: அப்போது அவர், எனக்கு 2014ல் மன நல பாதிப்பு ஏற்பட்டது. ஏன் வாழ வேண்டும் என நினைக்கு அளவுக்கு பாதிக்கப்பட்டேன். ஆனால், அம்மாவின் அறிவுரையால் சிகிச்சை எடுத்து மீண்டேன். இப்போது மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக ஒரு அமைப்பை ஆரம்பித்து பணியாற்றி வருகிறேன். என் வாழ்வில் மன அழுத்ததில் இருக்கும் ஒருவரையாவது காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.
இவ்வாறு மனதில் பட்டதைப் பளிச்செனப் பேசும் குணம் கொண்டவர்.
தீபிகாவும் சர்ச்சையும்:
தீபிகாவும் சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மர்ம மரணம் தீபிகாவை மட்டுமல்ல பல்வேறு திரைப் பிரபலங்களையும் சிக்கலில் இழுத்துவிட்டது. அப்படித்தான் தீபிகாவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்குள் வந்தார். இதுதான் அவர் சிக்கிய மிகப்பெரிய சர்ச்சை எனலாம். அந்த விசாரணைக்கு வந்த அவர் கண்ணீர் விட்டு கதறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.