நயன்தாரா, சிம்ரன், ஜோதிகா, என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் குரல் அனைவருக்கும் பிடிக்கும் இல்லையா? அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தீபா வெங்கட். நடிகை, ரேடியோ ஜாக்கி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தீபா வெங்கட் தன் அனுபவங்களையும், நெகிழ்வான சம்பவங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
கேள்வி: இன்றும் பலருக்கு உங்களுடைய குரல் நயன்தாராவினுடையது என்றுதான் தெரியும். அந்த அளவிற்கு உங்களுடைய குரல் ஒன்றி போகிறதே?
பதில்: ஆமாம். எனக்கு நயன்தாரான்னா ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு டப்பிங் பேச, வாய்ஸ் டெஸ்ட்ல நான் தேர்வாகமாட்டேன் என்றுதான் நினைத்தேன். அப்பறம், செலக்ட் ஆகிட்டேன். நயன்தாரா அவங்களும் என் குரலைக் கேட்டு, அவங்க குரலோடு பொருந்திப்போவதாக சொன்னதில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இயக்குநர் அட்லி மூலம்தான் நான் நயன்தாராவுக்கு டப்பிங் பேசினேன். இப்போ, தொடர்ந்து டப்பிங் செய்து வருகிறேன். எனக்கும் நயன்தாராவுக்கு ப்ரோஃப்ஸ்னலா ஒரு ஆரோக்கியமான உறவு தொடருது.
கேள்வி: சினிமா, சீரியல் நடிச்சிட்டு இருந்தீங்க. இப்போ உங்களைப் பார்க்கவே முடியல. ஏன்?
பதில்: எனக்கு கேமராவைவிட மைக் ரொம்ப புடிச்சு போயிடுச்சு. நான் வாய்ஸ் ஆர்ட்டிஸ்டாகதான் என் பணியை தொடங்கினேன். மைக்தான் என் முதல் காதல். சீரியல்,சினிமா எல்லாம் வாய்ப்பு வந்தப்போ பண்ணுனேன்.
கேள்வி: நயன்தாராவை சந்திக்கும் வாய்ப்பு எப்போது கிடைத்தது?
பதில்: எனக்கு அறம் படம் டப்பிங் செய்யும்போது நயன்தாரா அவங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஏன்னா, அறம் படத்துல என்னோட ரெக்காடிங்ஸ் கேட்டுட்டு, சில காட்சிகளில் கொஞ்சம் மாற்றம் செய்யும்னு சொன்னாங்க. அவங்க எதெல்லாம் இன்னும் கொஞ்சம் வாய்ஸ் மாடுலேசன் வேணும்னு என்கிட்ட சொன்னாங்க. அது புதிய அனுபவம். அறம் படத்துல நயன்தாரா என்ன எதிர்பார்க்கிறாங்கன்னு எனக்குப் புரிந்தது.
கேள்வி: உங்க வாய்ஸ் ஆர்ட்டிஸ் படம் எப்படி தொடங்கியது?
பதில்: நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு இந்தி நல்லா பேசத் தெரியும்.அதுனால, எனக்கு கார்ட்டூன்களுக்கு டப்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்பறம், தமிழ் சினிமாவில் அப்பு படத்தில், தேவையாணி மேடம்க்கு டப்பிங் பேசியிருந்தேன். இப்போதும், என்னோட வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் பயணம் நல்லா போயிட்டு இருக்கு.
கேள்வி: டப்பிங் பணியில் நீங்கள் சந்தித்த சிக்கல்கள் என்ன?
பதில்: என்னை பொறுத்த வரையில், சிரிப்பது ரொம்பவே கடினம். சிரிப்பில் நிறைய வகைகள் இருக்கு. ஒருவரின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு சிரிக்க வேண்டும். அதுவும் சிரிப்பொலி கூட சரியாக பொருந்த வேண்டும் அல்லவா. எனக்கு சிரிப்பது கொஞ்சம் கடினமாக இருந்துருக்கு. மொழி தெரியாத நடிகைகளுக்கு டப்பிங் பேசும்போது சிரமப்பட்டுருக்கேன். அதாவது அவங்களுக்கு மொழி தெரியாம எதாவது சம்பந்தம் இல்லாத இடத்தில் நிறுத்தி பேசிடுவாங்க. டப்பிங் பணி மிகவும் சவாலானதுதான்.
கேள்வி; உங்களுக்கு ரொம்ப பிடித்த கார்டூன் எது?
பதில்: எனக்கு எப்போதும் டாம் அண்ட் ஜெர்ரிதான்.
கேள்வி: டப்பிங் பணியில் நீங்க அதிக மெனக்கடலோடு பணியாற்றியதுண்டா?
பதில்: எல்லாமே அப்படிதான். குறிப்பிட்டு சொல்லனும்னா, செல்வராகவன் சாருக்கு என்ன ஏற்ற இறக்கத்தோடு பேசனுமோ,அதை அவரே பேசிக் காண்பிப்பாங்க. அதை அப்படியே பேசிட்டாலே போதும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்