அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டிசி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ், முதல் முறையாக நடிகராக களமிறங்கிய நிலையில், அவரது நடிப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு படம் வெளியாவதற்கு முன்பே அதிகமாக இருந்தது. தற்போது படத்தின் வெற்றியுடன், லோகேஷின் நடிப்புக்கான பாராட்டுகளும் அதிகரித்து வருகின்றன.
லோகேஷ் நடிப்பு குறித்த விமர்சனங்கள்
‘டிசி’ திரைப்படம் வெளியாகும் முன்பு லோகேஷ் கனகராஜ் நடிப்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, இயக்குநராக அறிமுகமானவரே நேரடியாக கதாநாயகனாக நடிப்பது சரியாக இருக்குமா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு முன்பு ‘கூலி’ படத்தைச் சுற்றி எழுந்த விமர்சனங்களும் லோகேஷை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யும் சூழலை உருவாக்கியிருந்தன.
‘டிசி’ தோல்வியடைந்தால் அது அவரது நடிப்பு மீதான விமர்சனமாக மட்டுமல்லாமல், லோகேஷின் திரைப்பயணத்தையே கேள்விக்குள்ளாக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
நடிப்பின் மூலம் பதில்
ஆனால் படம் வெளியான பிறகு நிலைமை மாறியது. லோகேஷ் கனகராஜின் நடிப்பு பல விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. குறிப்பாக தேவதாஸ் கதாபாத்திரத்தின் உடல்மொழி, அமைதியான காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் காட்டிய தீவிரம் ஆகியவை கவனம் பெற்றன.
எலும்பு விலகியும் தொடர்ந்த பயிற்சி
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ‘டிசி’ படத்திற்காக மேற்கொண்ட கடுமையான உடற்பயிற்சியின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், லோகேஷ் நீண்ட நேரம் தீவிரமாக உடற்பயிற்சி செய்வது இடம்பெற்றுள்ளது. அவருக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர், பயிற்சியின் போது லோகேஷின் தோள்பட்டை எலும்பு விலகியதாகவும், அதையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். ‘டிசி’ கதாபாத்திரத்திற்காக அவர் 50 நாட்களில் 90 பயிற்சி அமர்வுகளை மேற்கொண்டதுடன், ஒரு நாளைக்கு இரண்டு முறை உடற்பயிற்சி செய்துள்ளார்.
டிசி வசூல்
டிசி திரைப்படம் இரண்டாவது வாரத்திலும் நல்ல ஓட்டத்தைத் தொடர்ந்த நிலையில், உலகளவில் ரூ.100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. நாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே லோகேஷ் கனகராஜ் 100 கோடி வசூலை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், படம் வெளியாவதற்கு முன்பு லோகேஷின் நடிப்பைச் சுற்றி எழுந்த கேள்விகளுக்கு ‘டிசி’ வெற்றியும் அவரது நடிப்பும் பதிலாக அமைந்துள்ளன. இயக்குநராக மட்டுமல்லாமல், கதாபாத்திரத்திற்காக உடலையும் மனதையும் தயார்படுத்திக் கொள்ளும் நடிகராகவும் லோகேஷ் கனகராஜ் தன்னை நிரூபித்திருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
