பிரபல சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள புதிய நடிகரை, டிசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் கன் அறிமுகப்படுத்தியுள்ளார்.


சூப்பர் மேன் திரைப்படம்:


டிசி நிறுவனத்தின் இயக்குனராக பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கன் பொறுப்பேற்றதை தொடர்ந்து, பல்வேறு புதிய திட்டங்களை வடிவமைத்து வருகிறார். அதன் முக்கிய இலக்கு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு டிசி நிறுவனம் சார்பில் வெளியாக உள்ள திரைப்படங்கள், சீரிஸ்கள் மற்றும் வீடியோ கேம்களை ஒரே கோர்வையாக சேர்த்து ரசிகர்களுக்கான ஜனரஞ்சகமான கதையை சொல்வது தான். அதற்கான சிறு முன்னோட்டத்தையும், படங்களின் வரிசையையும் அண்மையில் வெளியிட்டார். அதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது சூப்பர் மேன் லெகசி என்ற படம் தொடர்பான அறிவிப்பு தான். அந்த படத்திற்கான கதையை எழுதியதோடு, அதனை தானே இயக்க உள்ளதாகவும் ஜேம்ஸ் கன் அறிவித்து இருந்தார்.


புதிய சூப்பர் மேன் யார்:


டிசி யுனிவெர்ஸை மொத்தமாக ரீபூட் செய்ய உள்ளதால், ஏற்கனவே சுப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹென்றி கேவல் இனிமேல் அந்த வேடத்தில் நடிக்கமாட்டார் என ஏற்கனவே ஜேம்ஸ் கன் அறிவித்து இருந்தார். அதைதொடர்ந்து புதிய சூப்பர் மேன் கதாபாத்திர நடிகருக்கான தேடுதல் வேட்டையை ஜேம்ஸ் கன் நீண்ட நாட்களாக தேடி வந்தார். பல்வேறு முன்னணி நடிகர்களும் இதற்கான போட்டியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்து வரும் சூப்பர் மேன் லெகசி படத்தில் டேவிட் கோரன்ஸ்வெட் சூப்பர் மேன் ஆகவும், அவரது மனைவியான லூயிஸ் லேன் கதாபாத்திரத்தில் ரேச்சல் ப்ரோஸ்னஹனும் நடிப்பார்க்ள் என ஜேம்ஸ் கன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 






யார் இந்த டேவிட் கோரன்ஸ்வெட்?


அமெரிக்காவை சேர்ந்த 29 வயதான டேவிட் கோரன்ஸ்வெட் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸ் தொடரில் வெளியான தி பொலிடிசியன் மற்றும் ஹாலிவுட் ஆகிய சீரிஸ்களில் நடித்து பிரபலமடைந்தார். அதைதொடர்ந்து, லுக் போத் வேஸ் மற்றும் பேர்ல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 32 வயதான ரேச்சல் பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதற்காக பிரைம் டைம் எம்மி விருது மற்றும் இரண்டு முறை கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார். இவர்களது நடிப்பில் உருவாக உள்ள சூப்பர் மேன் லெகசி திரைப்படம், 2025ம் ஆண்டு ஜுலை 11ம் தேதி வெளியாக உள்ளது.


ஜேம்ஸ்கன் அதிரடி திட்டம்:


உலக அளவில் சூப்பர் ஹீரோக்களின் கதை என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது, அமெரிக்காவை சேர்ந்த  மார்வெல் மற்றும் டிசி நிறுவனங்கள் தான். காமிக்ஸ் புக் அடிப்படையில் மார்வெலை காட்டிலும் டிசி நிறுவனம் அதிகப்படியான ரசிகர்களை கொண்டிருந்தாலும், 2008ம் ஆண்டு மார்வெல் நிறுவனம் திரைப்படங்களை வெளியிட தொடங்கி தற்போது பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால், டிசி நிறுவனமோ திரைப்பட உலகில் தனக்கான நிலையான இடத்தை உருவாக்க முடியாமல் தவித்து வருகிறது. ஸ்னைடர் வெர்ஸ் என ஒன்று தொடங்கப்பட்டாலும், மோசமான நிர்வாக காரணங்களால் அது தோல்வியையே சந்தித்தது. அதைதொடர்ந்து தான், பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கன் டிசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஏற்கனவே உள்ள ஹென்றி கேவல், பென் அஃப்ளெக் மற்றும் கேல் கேடட் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் அனைவரையும் கழற்றிவிட்டு, இளம் நடிகர்கள் மூலம் புதிய டிசி சினிமாடிக் யூனிவெர்ஸை கட்டமைக்க திட்டமிட்டுள்ளார்.