கோபம், அன்பு, மிரட்டல், போன்ற நவரசம் மிகுந்த நடிப்பை தன்னுடைய முகம் மற்றும் பார்வையால் வெளிப்படுத்த கூடிய நடிகர் தான் ஜி.சீனிவாசன். பன்முக கலைராக விளங்கிய இவர், வயது மூப்பு காரணமாக வரும் பிரச்சனைகள் காரணமாக சென்னை சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி தன்னுடைய 95 வயதில் உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகில் தற்போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் என்பதை தாண்டி, இவர் பிரபல நடன இயக்குனர் புலியூர் சரோஜாவின் கணவர் ஆவர்.

1933-ஆம் ஆண்டு தமிழகத்தின் நெல் களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சையை அடுத்த சிற்றூரில் உள்ள விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் ஜி சீனிவாசன் . சிறுவயதிலேயே கலைகள் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், தன்னுடைய பள்ளி படிப்பை தஞ்சையில் துவங்கினார்.  தனக்கு உள்ள கலை ஆற்றலை பள்ளியில் நடைபெறும் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, போன்றவற்றில் வெளிப்படுத்தி ஏராளமான பரிசுகளை வென்றார்.

கலையிலும் - கல்வியிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர், சிறுகதை எழுதுவதை தொடர்ந்து வந்தார். பள்ளி படிப்பை முடித்தவுடன், இவருக்கு கலைகள் மீது ஆர்வம் இருந்ததை அறிந்த நண்பர்கள், ஜி சீனிவாசனை சென்னைக்கு செல்லும்படி ஆலோசனை கூறினார்கள். நண்பர்களின் ஆலோசனையின் பெயரில் சென்னைக்கு வந்த இவர், அங்கு இயங்கி வந்த பிரபல நாடகக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு நாடகத்திற்கான கதைகளை எழுதுதல், இயக்குதல், என தன்னை நாடக துறையில் நிலை நிறுத்திக் கொண்டார்.

தனக்குள் இருந்த நடிப்பை வெளிக் கொணரும் வகையில், பல்வேறு நாடகங்களில் துணை கதாபாத்திரங்களிலும், முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். சீனிவாசனின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சொந்தமாக நாடக குழு ஒன்றையும் துவங்கிய சீனிவாசன், பல்வேறு வரலாற்று நாடகங்கள் மற்றும் ஜனரஞ்சகமான குடும்ப நாடகங்களை நடத்தினார். மேலும் திரைப்படத்தில் உள்ள ஆர்வம் காரணமாக சில முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சீனிவாசன், நாடகம் -திரையுலகம் என இரண்டிலும் கவனம் செலுத்த துவங்கினார்.

1975-ல் வெளியான 'அவள் ஒரு காவியம்' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். பின்னர் கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க அந்த படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல், என மூத்த நடிகர்களுடன் மட்டும் இன்றி தனுஷ் போன்ற இளைய தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

நாடகத்துறையில் இவர் பிரபலமாக இருந்த காலகட்டத்தில், நாடகத்துறையில் அறிமுகமாகி, பின்னர் சினிமாவில் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்த, நடன இயக்குனர் புலியூர் சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சத்யா என்கிற மகன் இருந்த நிலையில், அவர் எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

மகனின் இழப்புக்கு பின்னர், இருவருமே திரையுலகிய விட்டு விலகிய நிலையில், புத்திர சோகத்தில் மூழ்கினர். அவ்வப்போது புலியூர் சரோஜா மட்டும் சில பேட்டிகளை கொடுத்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த நடிகர் ஜி ஸ்ரீனிவாசன், சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்... தன்னுடைய 95 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மரணம், திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலர் தங்களின் இரங்கலை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.