டான்ஸ் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான் என உலகமே கொண்டாடும் போது நமது இந்தியாவுக்கு கிடைத்த ஒரு மாபெரும் பொக்கிஷம் டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா. உடலை ரப்பர் போல வளைத்து வளைத்து ஆடி தென்னிந்திய சினிமாவில் ஒரு புதிய ட்ரெண்ட் செட் செய்தவர் நமது 'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' பிரபு தேவா என்றால் அது மிகையல்ல. இந்த மாபெரும் கலைஞனுக்கு இன்று 50வது பிறந்தநாள்.
நடன இயக்குனர் சுந்தரத்தின் வாரிசுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து தான் வர வேண்டுமா என்ன? ரத்தத்தில் ஊறிய நடனத்தை முறைப்படி சிறிய வயது முதல் கற்றவர். வெஸ்டர்ன், பரதம் என அனைத்து நடன கலைகளை கற்று தேர்ந்தவர். ஒரு நடன இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கிய பிரபு தேவா தொடக்கத்தில் ஒரு சில பாடல்களில் நடனமும் ஆடியிருப்பார். அவரின் இந்த அசுர வளர்ச்சிக்கு நிச்சயம் உறுதுணையாய் இருந்தது அவரின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். சிறிய வயது முதல் அவரை சரியான முறையில் ட்ரெயினிங் கொடுத்து இன்று உலகம் போற்றும் வெற்றியாளராக ஜொலிக்க வைத்துள்ளார்.
நடிகையாக பிரபுதேவா :
டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பின்னர் நடிகராகவும் களமிறங்கி ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். நடனத்தை கடந்தும் அவரின் அப்பாவித்தனமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்து திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். காதலன், லவ் போர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, வி.ஐ.பி, வானத்தைப் போல, பெண்ணின் மனதை தொட்டு, தேவி, குலேபகாவலி போன்ற படங்கள் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. சூப்பர் பாஸ்ட் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் போடுவதில் அவரை அடிச்சிக்க ஆளே இல்லை. இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.
பலரின் இன்ஸ்பிரேஷன் :
இன்று சிறு குழந்தைகள் கூட அட்டகாசமாக டான்ஸ் ஆடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. டான்ஸ் கிளாஸ் போவது என்பது இன்றியமையாத ஒரு திறமைகளை வளர்க்கும் காரணியாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு நடனத்துக்கு முக்கியத்துவம் அதிகரித்துவிட்டது. ஏராளமான டான்ஸ் போட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. இன்றைய டான்ஸ் ஸ்டைல் என்பது பல பரிமாணங்களை கடந்துள்ளது. ஏராளமான கலைஞர்களுக்கும் ஒரு வாழ்க்கையாக மாறியுள்ளது டான்ஸ். இதற்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்டது 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி' தான்.
இன்று தென்னிந்திய சினிமாவில் இருக்கும் பல நடன இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நிகழ்ச்சி என்றும் சொல்லலாம். இப்படி பலரின் வாழ்க்கையில் இன்ஸ்பிரேஷனாக இருந்த ஒருவர் பிரபு தேவா. யாருக்கெல்லாம் டான்ஸ் பிடிக்குமோ அவர்களுக்கெல்லாம் நிச்சயம் பிரபு தேவாவும் பிடிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட வைத்த, வைக்கும் கலைஞனே உனக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.