ஶ்ரீலீலாவைத் தொடர்ந்து சாய் பல்லவி படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. மாரி படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தனுஷ் சாய் பல்லவி கூட்டணி இணைவது குறித்து ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
நடிகர் தனுஷ் போர் தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் முடித்துள்ளார். இதனைத்த் தொடர்ந்து அடுத்தபடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அமரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் தனுஷின் 48 ஆவது படமாக உருவாக இருக்கிறது. தனுஷின் வண்டர்பார்ஸ் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது . சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஶ்ரீலீலா இப்படத்தில் முதல் நாயகியாக அறிமுகப்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து தற்போது சாய் பல்லவி படத்தில் இணைந்துள்ளார்.
D58 படத்தில் இரு நடிகைகள்
தமிழ் , இந்தி , தமிழ் , தெலுங்கு என ஒவ்வொரு மொழியிலும் ஒரு படம் என நடித்து வருகிறார் தனுஷ் . தனுஷ் நடித்து கடந்த ஆண்டு இந்தியில் வெளியான தேரே இஷ்க் மே மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றது. தமிழில் தனுஷ் நடித்துள்ள கர படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கவனமீர்த்தது. அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது . வரலாற்றில் பேசப்படாத நாயகர்களை பற்றி இந்த படம் பேசும் என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு படங்கள் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை ஶ்ரீலீலா . இவர் இந்த ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அடுத்தடுத்து தமிழில் பல படங்கள் இவருக்கு வந்துகொண்டிருக்கின்றன. மற்ற படங்களில் ஶ்ரீலீலா பெரும்பாலும் கிளாமரான ரோல்களில் மட்டுமே நடித்துள்ளார். தமிழில் அவருக்கு அடுத்தடுத்து கதையம்சம் உள்ள கதாபாத்திரங்கள் வருவது வரவேற்கத்தக்கது.
தனுஷூடன் இரண்டாவது முறை இணையும் சாய் பல்லவி
8 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் சாய் பல்லவி இணைந்து நடிக்க உள்ளார்கள். 2018 ஆம் ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் தனுஷ் சாய் பல்லவி இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இருவரது கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது குறித்து ரசிகர்கள் உற்சாகம் காட்டி வருகிறார்கள்.
