மிக்ஜாம் புயல்:
மிக்ஜாம் புயலால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. 4 மற்றும் 5ம் தேதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வடசென்னையில் இன்னும் தண்ணீர் வடியாத நிலையில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடியிருப்புகள், சாலைகள் மற்ரும் அலுவலகங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை விட்டு 3 நாட்களை கடந்த போதிலும் சில இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது.
வடசென்னை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. இந்த சூழலில் மழை பெய்து சென்னை வெள்ளத்தில் தத்தளித்த அடுத்த நாளே நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக் ரூ.10 லட்சம் நிவாரணம் நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்து அதற்கான காசோலையை வெளியிட்டார். நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வெள்ள நீரில் தத்தளித்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார். நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பாதிக்கபப்ட்டவர்களுக்கு உதவுமாறு டிவிட்டர் பதிவில் கேட்டுக் கொண்டார். நடிகர் அஜித்குமார் தனது நண்பர்கள் மூலம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் அறிமுகமாக நடிகராக இருக்கும் kpy பாலா தனது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்பல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் என மொத்தமாக 200 குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கி உள்ளார். இது மட்டும் இல்லாமல் அண்மையில் திரைக்கு வந்த பார்க்கிங் படக்குழுவினர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 2 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: Actor Parthiban: 'என் கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால்..' மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்!