அரிசி படத்தில் தான் நடிக்க என்ன காரணம் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


மோனிகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சண்முகம் தயாரிக்கும் படம் ‘அரிசி’. இந்த படத்தை எஸ்.ஏ.விஜயகுமார் இயக்குகிறார். இளையராஜா இசையமைத்துள்ள அரிசி படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் விவசாயியாக நடித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்திலும், திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் சிசர் மனோகர், ராஜா திருநாவுக்கரசு, அன்பு ராணி, சுபா, அர்ஜூன் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 


இப்படியான நிலையில் அரிசி படத்தில் தான் நடிக்க என்ன காரணம் என்பதை முத்தரசன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “நடிகராகும் ஆசையோ, விருப்பமோ எனக்கு சுத்தமாக கிடையாது. அரிசி படத்தின் இயக்குநர் விஜயகுமார் ஒருநாள் என்னை சந்திக்க வந்தார். அதற்கு முன்னால் அவர்களை நான் சந்தித்து இல்லை. வந்ததும், ‘இந்த மாதிரி ஒரு ஆவணப்படம் இருக்கு நீங்க நடிக்க வேண்டும்’ என சொன்னார்கள். நான் அவர்களிடம் ‘ஐயா சாமி.. எனக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது. அதில் ஆர்வமும் இல்லை. அதனால் என்னை கூப்பிடாதீர்கள். நீங்கள் ஏதாவது கிராமத்தில் போய் எடுக்குறீர்கள் என்றாலோ அல்லது கட்சியில் வேறு யாராவது நடிக்க வேண்டும் என்றாலோ தேவையான உதவி பண்றேன் என சொன்னேன். நான் வரமாட்டேன் என பிடிவாதமாக சொல்லிட்டேன். 


ஆனால் இயக்குநர் கதையெல்லாம் சொல்லிவிட்டு, என்னை ஏன் அணுகினார்கள் என விளக்கம் கொடுத்தார்கள். மேலும்,உங்கள் பேட்டியெல்லாம் பார்த்தேன். யதார்த்தாம பேசுறீங்கன்னு தான் தேடி வந்ததாக கூறினார்கள். நீங்கள் சிந்தித்து சொல்லுமாறு கூறி விட்டு மறுநாள் வருவதாக சொன்னார்கள். அப்புறம் கட்சியின் துணை செயலாளரிடம் விவரத்தை கூறினேன். அவர் என்னிடம், ‘ஆவணப்படம் என்றால் நடியுங்கள், பெரிய வேலையெல்லாம் அங்கு இருக்காது’ என சொன்னார்கள். மறுநாள் வந்ததும் என்னால் 2 நாட்கள் மட்டுமே வர முடியும் சொல்லி சென்றேன். குடவாசல் அருகே இருக்கும் நெய்குப்பை கிராமத்தில் தான் ஷூட் நடந்தது.  2 நாட்கள் தொடங்கி கிட்டதட்ட 35 நாட்கள் நடிக்க வைத்து விட்டார்கள். 


கேமரா முன்னால் நடிக்க எனக்கு மிகப்பெரிய தயக்கம் இருந்தது. நான் சினிமா பார்ப்பேனே தவிர, ஷூட்டிங் காட்சிகள் எதுவும் பார்த்தது இல்லை. இயக்குநர் விஜயகுமார் சொன்னது போல நடித்துக் கொடுத்தேன். ஒரு கட்டத்தில் யாருக்கும் என்னுடைய நடிப்பால் இழப்பு ஏற்பட்டு விடக்கூடாது என சொல்லி சரியான அளவில் நடித்து கொடுத்தேன்”என தெரிவித்துள்ளார்.