ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் தமிழ் நடிகர் சத்யராஜ் மட்டுமில்லாமல் இந்தி நடிகர் அமீர்கான், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் செளபின் சாஹிர் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களில் உபேந்திரா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கன்னட திரையுலகில் மிகவும் முக்கியமான நடிகர் உபேந்திரா. நடிகராக மட்டுமின்றி இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவர் உபேந்திரா. பல சவாலான கதாபாத்திரங்களை சவாலாக எடுத்து நடிக்கும் திறன் கொண்டவர். தமிழ் சினிமாவின் பல சவாலான படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்து நடித்துள்ளார்.
வசூல் ராஜா எம்பிபிஎஸ்:
இந்தியில் வெளியான படம் முன்னாபாய் எம்பிபிஎஸ். இந்த படம் தமிழில் வசூல் ராஜா எம்பிபிஎஸ் என்று கமல் நடித்து வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படத்தை 2005ம் ஆண்டு கன்னடத்தில் உப்பிதாதா எம்பிபிஎஸ் என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு உபேந்திராவே வசனங்கள் எழுதினார். இந்த படத்தை ராஜேந்திர பாபு இயக்கினார்.
கமல்ஹாசனின் திரைவாழ்வில் மிக மிக முக்கியமான திரைப்படமாக இருப்பது தேவர்மகன். இந்த படத்தை தண்டகே தக்க மகா என்ற பெயரில் ரீமேக் செய்து உபேந்திரா நடித்துள்ளார். மகேந்தர் இயக்கிய இந்த படம் அங்கு தோல்வி அடைந்தது. அம்ப்ரீஷ், உபேந்திரா, லைலா ஆகியோர் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.
பிதாமகன்:
தமிழில் விக்ரம், சூர்யா இருவரும் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் பிதாமகன். பாலா இயக்கிய இந்த படத்தில் இவர்கள் இருவரது நடிப்பும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவால் பாராட்டப்பட்டது. இந்த படத்தை அனதரு என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதில் விக்ரம் கதாபாத்திரத்தில் உபேந்திரா நடித்திருப்பார். சூர்யா கதாபாத்திரத்தில் தர்ஷன் நடித்திருப்பார்.
வரலாறு:
தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் 3 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் வரலாறு. இந்த படத்தில் அஜித்குமார் பெண்மை கலந்த பரதக் கலைஞராக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் மிகவும் சவாலானதாக இருக்கும். அதேபோல, வில்லனாகவும் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரமும் மிகவும் சவாலானதாக இருக்கும். அஜித்தின் இந்த கதாபாத்திரங்களில் உபேந்திரா நடித்திருப்பார்.
காஞ்சனா:
தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் காஞ்சனா. திருநங்கை கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் அசத்தலாக நடித்திருப்பார். ராகவா லாரன்ஸ் நடித்த இந்த கதாபாத்திரத்தில் உபேந்திரா நடித்திருப்பார். கல்பனா என்ற பெயரில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ராகவா லாரன்ஸ் இந்த படத்தை இயக்கினார்.
காஞ்சனா 2:
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 2 படத்தையும் இவர் ரீமேக் செய்து நடித்திருப்பார். கல்பனா 2 என்ற பெயரில் இந்த படம் ரீமேக்காகி உபேந்திரா நடித்திருப்பார். அனந்தராஜு இந்த படத்தை இயக்கியிருப்பார். வசூல் ராஜா படம் தவிர மற்ற படங்கள் ஒவ்வொன்றும் சவாலான கதாபாத்திரங்களை கொண்டது. அதை சவாலாக எடுத்தே தான் நடித்ததாக உபேந்திரா ஒரு பேட்டியில் கூறியிருப்பார். மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களின் ரீமேக்கிலும் அவர் நடித்துள்ளார்.