கூலி


லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினி நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். நாகர்ஜூனா , ஸ்ருதி ஹாசன் , உபேந்திரா , செளபின் சாஹீர் , சத்யராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் கூலி மற்றூம் எல்.சி.யு பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.


லோகேஷ் படத்தில் ரஜினி கமல்


லோகேஷ் கனகராஜ் படங்களின் தனித்துவம் என்று மல்டி ஸ்டார்களை அவர் ஒருங்கிணைப்பது என்று சொல்லலாம். மாஸ்டர் , விக்ரம் , லியோ ஆகிய படங்களில் வெவ்வேறு  நடிகர்களை தனது படங்களில் நடிக்க வைத்திருக்கிறார். இது குறித்து லோகேஷ் கனகராஜ் இப்படி கூறினார் " எனக்கு நிறைய நடிகர்களை வைத்து சேர்ந்து வேலை செய்வது பிடிக்கும். கூலி ஒரு பான் இந்திய படம். பான் இந்திய படம் என்றாலே அதில் எல்லா மொழி நடிகர்களும் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் என் படத்தில் நடிக்கும் நடிகர்கள் யாரும் வெறும் முகத்தை காட்டிவிட்டு செல்பவர்கள் இல்லை. அவர்கள் எல்லாருக்கும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. ஒவ்வொரு நடிகரும் தனது காட்சி முடிந்துவிட்டால் செட் விட்டு கிளம்பமாட்டார்கள். தன் உடன் நடிக்கும் நடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இருந்து பார்ப்பார்கள். ரஜினி சாருக்கு ஷாட் முடிந்தால் கூட அவர் மானிடரில் வந்து மற்ற நடிகர் நடிப்பதைப் பார்ப்பார். பார்த்து அவர்களை பாராட்டிவிட்டு தான் ரஜினி செல்வார்" என லோகேஷ் தெரிவித்துள்ளார்.


 "மாநகரம் படம் வெளியானபோது முதலில் எனக்கு ஃபோன் செய்து பாராட்டியவர் ரஜினி சார் தான் . அப்போதிருந்தே அவரும் நானும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவதற்கான பேச்சுவார்த்தையின் இருந்து வந்தோம். ரஜினி மற்றும் கமலை வைத்து நான் ஒரு கதை கூட எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் கோவிட் காரணமாக அந்த நடக்காமல் போனது. நான் ஒரு தீவிர கமல் ரசிகன் என்றாலும் ஒரு கமல் ரசிகனாக இருந்து  ரஜினியை வைத்து படம் பண்ண வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை" என லோகேஷ் தெரிவித்துள்ளார்