நடிகர் சிலம்பரசன் நடித்த வெந்து தணிந்தது காடு படத்தை புரோமோஷன் செய்ததற்காக நடிகர் கூல் சுரேஷூக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசு வழங்கி அசத்தியுள்ளார்.
சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியான தியேட்டர்களில் வெளியானது. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.
எதிர்பார்த்தை போல படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதன் 2 ஆம் பாகம் தொடர்பான காட்சிகளை சில தினங்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது. மேலும் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குநர் கெளதம் மேனனுக்கு புல்லட் பைக் ஒன்றும், நடிகர் சிம்புவிற்கு கார் ஒன்றையும் பரிசாக அளித்தார்.
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் போதே வெந்து தணிந்தது காடு... எஸ்.டி.ஆருக்கு வணக்கத்த போடு... என்று லூப் மோடில் இந்த வசனத்தை சொல்லி அப்படத்தின் பெயரை பட்டித்தொட்டியெங்கும் பரப்பியவர் நடிகர் கூல் சுரேஷ். எந்த படம் ரிலீஸ் ஆனாலும் சரி வெந்து தணிந்தது காடு என சொல்லி அவர் பேசும் பேச்சுக்கள் எல்லாம் வேற லெவலில் இருந்தது. ஆனால் கூல்சுரேஷூக்கு எந்த வித பரிசும் ஏன் அளிக்கவில்லை என கூறி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ், வீடியோக்கள் போட்டு கேள்வியெழுப்பினர்.
இதற்கிடையில் கூல் சுரேஷூக்கு ஐபோன் ஒன்றை பரிசளித்த புகைப்படம் இன்றைய தினம் இணையத்தில் வைரலானது. பதிலுக்கு ஐசரி கணேஷூக்கு இரண்டு குச்சிமிட்டாயை பரிசாக கூல் சுரேஷ் அளித்தார். இதனைத் தொடர்ந்து வெளியான வீடியோவில், ஐசரி கணேஷ் தனது குழந்தைகளின் கல்வி செலவை முழுவதும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளதாக கூல் சுரேஷ் கூறியுள்ளார். கார் என்ன, புல்லட் என்ன அதைவிட விலை மதிக்க முடியாத பரிசு இது என கூல்சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கல்வி கண் திறந்தது காமராசர் என்றால், அதன்பிறகு இன்றைக்கு பள்ளி,கல்லூரிகள் நடத்தி வருவதன் மூலம் கல்வி கண் திறந்தது ஐசரி கணேஷ் தான். இனிமேல் என் வீட்டு பூஜையறையில் உங்களுடைய போட்டோவை தான் மாட்டி வைக்கப் போகிறேன். இதை நான் சும்மா வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை என கூறி இதற்கு காரணமாக இருந்த ரசிகர்களுக்கும் கூல் சுரேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.