உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உண்மையான பெயர் தெரியாததால் நிகழ்ச்சியில் இருந்து மாணவி வெளியேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கோன் ஹோனார் க்ரோர்பதி:


உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி ’கோன் பனேகா க்ரோர்பதி’. இந்த நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தொகுத்து வழங்கியுள்ளனர். தமிழில் ’கோடீஸ்வரன்’ என்ற பெயரிலும் இந்த நிகழ்ச்சி பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் மராத்தி பதிப்பானது ’கோன் ஹோனார் க்ரோர்பதி’ என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இந்த ஆண்டுக்கான கோன் ஹோனார் க்ரோர்பதி நிகழ்ச்சியை பிரபல நடிகர் சச்சின் கெதேகர் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. 




போட்டியாளரைத் தேர்வு செய்வதற்கான முதல் கேள்வி முதலில் கையை தூக்குபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கேட்கப்பட்டது. 


முதல் கேள்வி:


துக்காராம் துறவியின் ஆன்மீக வரிகளை சரியான வரிசைப்படி வரிசைப்படுத்துக என்ற கேள்விக்கு.. A)வன்சாரே B)ஆம்ஹா c)சோயாரி D)வ்ருக்‌ஷவல்லி என்ற நான்கு பதில்கள் தரப்பட்டது.


இதை D,B,C,A (வ்ருக்‌ஷவல்லி  ஆம்ஹா  சோயரி வனச்சரே - Vrukshavalli Amha Soyari Vanchare ) என்று முதலில் சரியாக வரிசைப்படுத்தினார் காவல்துறை துணை ஆய்வாளரான நேஹா ஹண்டே. முதலில் கையை தூக்குபவருக்கு முன்னுரிமை கேள்வியில் வென்றதால்  இவரை போட்டியில் கலந்துகொள்ள அழைத்தார் சச்சின்.


இந்த தொடரின் முதல் போட்டியாளரான நேஹா ஹண்டேவிடம் 8 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ’கேள்வியை திருப்பிப் போடுதல்’ மற்றும் ‘பார்வையாளர்களின் வாக்குகள்’ என்ற இரண்டு லைஃப்லைனை பயன்படுத்தி 80,000 ரூபாய் ரொக்கம் வெற்றிபெற்றார். 1,60,000 ரூபாய் பரிசுக்கான 9வது கேள்வி கேட்கப்பட்டது.


போட்டியில் இருந்து வெளியேறினார்:


இந்தியாவில், ‘அஜய் சிங் பிஸ்ட்’ என்பது எந்த மாநில முதலமைச்சரின் இயற்பெயர்? என்று கேட்கப்பட்டது


அதற்கு மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய தேர்வுகள் கொடுக்கப்பட்டன. இந்த கேள்விக்கு பதில் தெரியாததால் தனது கடைசி லைஃப்லைனை பயன்படுத்த முடிவுசெய்த நேஹா தனது தோழிக்கு வீடியோ காலில் பேசி இந்த கேள்விக்கு பதில் கேட்டார். ஆனால், நேஹாவின் தோழியாலும் பதிலளிக்க முடியவில்லை. இதனால் குழப்பமடைந்த நேஹா போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு ஒப்புக்கொண்ட நெறியாளர் சச்சின் நேஹா வெற்றிபெற்ற 80000 ரூபாய்க்கான காசோலையை அவருக்கு வழங்கினார்.




’அஜய் சிங் பிஸ்ட்’ யார்?


அஜய் சிங் பிஸ்ட் என்பது உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இயற்பெயர் என்ற பதிலை சச்சின் பின்னர் தெரிவித்தார்.


அஜய் சிங் பிஸ்ட் என்ற பெயரில் இருந்த 22 வயதான இளைஞரான யோகி ஆதித்யநாத், 1994ம் ஆண்டில் நாத் சமூகத்தினரிடமிருந்து தீட்சை பெற்றதால் அன்று முதல் அவர் யோகி ஆதித்யநாத் என்று அழைக்கப்படுகிறார்.


யோகி ஆதித்யநாத்தின் உண்மையான பெயர் தெரியாததால் 80 ஆயிரம் ரூபாயை இழந்ததோடு, போட்டியில் இருந்து விலகியது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யோகி ஆதித்யநாத்தின் இயற்பெயரான அஜய் சிங் பிஸ்ட் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று சமூகவலைதளங்களில் கூறியுள்ளனர்.