அர்ஜுன் தாஸ் நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கான் சிட்டி' திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் மற்றும் நடிகர் அர்ஜுன் தாஸ் ஆகியோர் படத்தின் வெற்றி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினர்.

Continues below advertisement

நிகழ்வில் பேசிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ், இன்றைய சூழலில் ஒரு சிறிய திரைப்படம் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்று கூறினார். கொரோனாவுக்குப் பிறகு ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் சிறிய படங்களை ரசிகர்கள் திரையரங்கிற்கு வரவழைப்பது சவாலாக மாறியுள்ளதாகவும், ஆனால் நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சென்றால் வெற்றி பெற முடியும் என்பதை 'கான் சிட்டி' நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தப் படத்தை உருவாக்க நம்பிக்கை வைத்து முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் படத்தை வெளியிட உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், 55 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பும், 95 கால்ஷீட்களும் இந்தப் படத்தின் பின்னால் இருந்த கடின உழைப்பை வெளிப்படுத்துவதாக கூறினார்.

Continues below advertisement

படத்தில் நடித்த வடிவுக்கரசி குறித்து உருக்கமாகப் பேசிய ஹரிஷ், 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்தும் இன்னும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் அவரது அர்ப்பணிப்பு தன்னை நெகிழ வைத்ததாக கூறினார். படப்பிடிப்பின்போதே இந்தப் படம் வெளியான பிறகு அனைவரும் வடிவுக்கரசியைப் பற்றித்தான் பேசுவார்கள் என்று கூறியிருந்ததாகவும், அது தற்போது நிஜமாகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தபோதிலும் அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திரைக்கதையை அர்ஜுன் தாஸ் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டதாகவும், போஸ்டர்களில் அனைத்து கலைஞர்களின் பெயர்களும் இடம்பெற வேண்டும் என்று முதலில் கூறியதும் அவர்தான் என்றும் பாராட்டினார்.

நடிகர் அர்ஜுன் தாஸ் பேசுகையில், படம் வெளியான முதல் காட்சி முடிந்த பிறகு கிடைத்த வரவேற்பு தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்றார். குறிப்பாக பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் அளித்த நேர்மறையான விமர்சனங்கள்தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் கூறினார்.

இந்த வெற்றிக்கான முழுப் பாராட்டும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜுக்கே சேரும் என்று தெரிவித்த அர்ஜுன் தாஸ், கதையை முதன்முதலில் கேட்டபோதே இது ஒரு கனவு நடிகர் பட்டாளத்துடன் உருவாகும் திரைப்படமாக இருக்கும் என்று இயக்குநர் கூறியதை நினைவுகூர்ந்தார். மூத்த கலைஞர்களுடன் இணைந்து நடித்தது தனது திரைப்பயணத்தில் பெருமைக்குரிய அனுபவம் என்றும் அவர் கூறினார்.

மேலும், வடிவுக்கரசியின் அர்ப்பணிப்பும், ஒவ்வொரு காட்சியையும் முழு ஈடுபாட்டுடன் நடித்த விதமும் தன்னை வியக்க வைத்ததாக கூறிய அவர், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருடைய நடிப்பைப் பாராட்டியதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார். குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் அளித்த ஆதரவு, எதிர்காலத்தில் இன்னும் தரமான படங்களை வழங்கும் பொறுப்பை அதிகரித்துள்ளதாகவும் அர்ஜுன் தாஸ் நன்றியுடன் குறிப்பிட்டார்.