இளையராஜா – இந்த மாபெரும் இசை கலைஞரின் வாரிசுகள் என்ற அடையாளத்தையும் தாண்டி, அவரது வீட்டு இசைப்பறவைகள் தங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டு வெற்றியும் கண்டுள்ளனர். அதில், ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படாத இசையமைப்பாளர்தான் கார்த்திக் ராஜா!



1992-ம் ஆண்டு முதல் சினிமா சார்ந்த இசை வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தாலும், 30 ஆண்டுகளாகியும் அவரை இசை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த சில பாடல்களுக்கு இவர்தான் இசையமைத்தாரா, இவர்தான் படத்திற்கு பின்னணி இசையமைத்தாரா என தெரியாதவர்களும், தெரிந்து போனால் ஆச்சர்யப்படுபவர்களும்தான் ஏராளம்.


மியூசிக்கல் ஹிட் ஆல்பம்ஸ்


கார்ததிக் ராஜாவுக்கு என தனி பெரும் ரசிகர் பட்டாளம் இல்லையென்றாலும், அவரது பாடல்கள் நமக்கு பிடித்த பாடல்களின் ப்ளேலிஸ்டில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். ”உங்களுடைய பாடல்களுக்கு நாங்கள் என்றுமே ரசிகர்தான் கார்த்திக் ராஜா” என்பதை அவரிடம் ஒரு முறையாவது சொல்ல வேண்டும். இதை அவரது பிறந்துநாள் அன்று பதிவு செய்வதில் மகிழ்ச்சியே!



தனது முழுமுதல் தனி படம் வெளியாவதற்கு முன்பு, பல படங்களுக்கான பின்னணி இசை வேலைகளில் பணியாற்றியுள்ளார். ஆனால், முதல் படம் ஒரு மியூசிக்கல் ஹிட்! “வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாத” “முத்தே முத்தம்மா”வில் கமல்ஹாசனை பாட வைத்து அல்டிமேட் செய்திருப்பார்.


அடுத்து அவர் இசையமைத்த படங்களின் ஆல்பம் பெரும்பாலும் கவனிக்க வைக்கும் ரகத்தில்தான் இருந்தது. நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் “இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்”, ஆல்பம் படத்தில் “செல்லமே செல்லம்”, காதலா காதலா “காசு மேல காசு வந்து”, வரிசையில் அடுத்த பாடலை சொன்னால் நீங்கள் இன்னும் கார்த்திக் ராஜாவின் இசைக்கு கனெக்ட்டாவீர்கள். உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் வரும் “உள்ளம் கொள்ளம் போகுதே உன்னை கண்ட நாள் முதல், உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே” – இப்போ நினைவுக்கு வருகிறதா? அதே சூப்பர் மெலடி பாடலை இசையமைத்தது கார்த்திக் ராஜாதான்.



தமிழில் அறிமுகமான சில காலங்களிலேயே, ’கிரஹன்’ படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அதே போல, சில கன்னடம் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளர். ஆனால், அவர் இசையமைத்த தமிழ் படங்கள் எல்லாமே ரசிகர்களின் ஃபேவரைட்ஸ்.  மெர்குரி பூக்கள், குடைக்குள் மழை, நெரஞ்ச மனசு, 3 ரோசஸ் என இவர் இசையமைத்த படங்களில் உள்ள பாடல்கள் ரசிகர்களுக்கு பரிச்சயமானவை.


டும்-டும்-டும் கலக்கல்!


டும்-டும்-டும் ஆல்பத்தை கேட்டவர்களெல்லாம் இப்போதும்  இந்த பாடலுக்கு யார் இசையமைத்தது  என குழப்பம் அடைவார்கள். ஏ.ஆர் ரகுமானா இருக்குமோ என பலரும் நினைத்தது உண்டு. இப்படி தனது இசையால், இளையராஜாவின் மேஜிக்கையும் நினைவுப்படுத்துவார். ஏ.ஆர் ரகுமான் ஸ்டைல் இசை ஆச்சர்யங்களையும் நமக்கு படைப்பார். ஆனால், கார்த்திக் ராஜா தனிதான்! அவரது பாணி என்றைக்கும் தனித்துவம்தான்! ஆனால், உங்களது குரலில் இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும், இன்னும் பல படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. ஹாப்பி பர்த்டே கார்த்திக்! இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் கார்த்திக் ராஜா தனக்கான இன்னிங்ஸ் முடித்து வீட்டில் இருக்கிறார் என்று அர்த்தமில்லை. பிசாசு 2, மாமனிதன் என இரு முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக அடுத்த இன்னிங்ஸை துவக்கியிருக்கிறார் கார்த்திக்ராஜா. அவர் அப்பாவை போலவே ராஜாதி ராஜன் இந்த கார்த்திக் ராஜா!