நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் ரோஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  நடிகர் மன்சூர் அலிகான் மீது நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான் பேசியதிற்கு ஏற்கனவே த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். 


கடந்த வாரம் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில், லியோ படத்தில் தனக்கு த்ரிஷாவுடன் நடிக்க காட்சிகள் கொடுக்கப்படவில்லை என்பத தெரிவிக்கும் விதமாக பேச தொடங்கி, சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியது. மன்சூர் அலிகான் பேசியதற்கு திரையுலகினர் உள்பட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


மன்சூர் அலிகான் விளக்கம்


இப்படி பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து  செய்தியாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார். அதில் "தப்பு செய்தால் தானே மன்னிப்பு கேட்க வேண்டும். நான் மன்னிப்பு கேட்கும் ஜாதி இல்லை" என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் "நான் தவறாக எதுவும் பேசவில்லை. என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை முழுமையாக பார்த்தல் நான் என்ன பேசினேன் என தெரிய வரும்" என மன்சூர் அலிகான் பதிலளித்தார்.


மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், “நான் எந்த பெண்களையும் தவறாக நினைக்க மாட்டேன். எல்லோரையும் அரவணைத்து தான் செல்வேன். தமிழ்நாடே என் பக்கம் தான் உள்ளது. இந்த பூச்சாண்டி வேலைகளுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத்தை பார்த்து கேட்கிறேன். இதெல்லாம் ஒரு விஷயமா? . மூத்த நடிகர் எஸ்.வி.சேகர், காரைக்குடியில் ஷர்மா குஷ்பூ பற்றி அவதூறு பேசினார்களே. அவர்கள் பாஜகவில் தானே இருக்கிறார்கள்.  கைது பண்ண சொல்ல வேண்டிதானே. நீட் தேர்வுக்கு அனிதா தற்கொலை செய்துக் கொள்ளும் போதும் இந்த மகளிர் ஆணையம் என்ன செய்துக் கொண்டிருந்தது. வெட்கம், மானம், சூடு, சுரணை இருந்தா நீ தூக்கு மாட்டி சாவு. 


மணிப்பூரில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டப்போது என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?   என்னுடைய விவகாரத்தில் 4 மணி நேரத்தில் அளித்த அறிக்கையை திரும்ப பெற்று  நடிகர் சங்கம் செய்தது மாபெரும் தவறு. 21 நாட்கள் அவகாசம் கொடுத்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 


நேற்றில் இருந்து நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நாசர், விஷால் என யாருக்கு அழைத்தாலும் போனை எடுக்க மாட்டேங்குறாங்க. கார்த்தி போனை எடுத்து பூச்சி முருகனை அழைத்து பேச சொன்னார். அவருக்கு கூப்பிட்டால் போனை எடுக்கவில்லை. மன்சூர் அலிகான் என்றால் இளிச்சவாயனா?. ஒழுங்கா நடந்துகோங்க. நான் எந்திரிச்சா ஒரு பிரளயமே கிளம்பும்” என மன்சூர் அலிகான் தெரிவித்தார். 


இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.