தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கும் சூரி இப்போது ஹீரோக்களுக்கு போட்டியாகவும் உயர்ந்து விட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாஸிகா, பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'மாமன்' படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

சூரி ஒரு நடிகர் என்பதை தாண்டி சிறந்த பிஸினஸ் மேனாகவும் இருந்து வருகிறார். ஆம், அம்மன் உணவகம் என்ற பெயரில் தனியாக ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதனை தனது தம்பி பொறுப்பில் விட்டுவிட்டார்.

இந்த நிலையில் தான் தனது அச்சகத்திற்கு அருகிலுள்ள அம்மன் உணவகம் பொதுப்பாதையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரையைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் புகார் அளித்துள்ளார். இவர் மதுரையில் நரிமேடு பகுதியில் அலைகள் என்ற பெயரில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் அவர் சூரியின் சகோதரர் மீது முத்துசாமி புகார் கொடுத்துள்ளார். 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் முத்துச்சாமி அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: "எனது அச்சகத்திற்கு அருகில் தான் லட்சுமணனின் அம்மன் உணவகம் இருக்கிறது. இந்த உணவகமானது பொதுப்பாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல முறை லட்சுமணனிடம் கூறியும் எந்த பலனும் இல்லை. அப்படியிருக்கும் போது லட்சுமணன் தனது கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் நுழைந்து பணம் மற்றும் முக்கியமான ஆவணங்களை திருடிச் சென்றதாக கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி மாடிக்கு செல்லும் வழியையும் பூட்டியுள்ளார். அந்த இடத்தையும் ஆக்கிரமிக்க கூடுதல் வாடகை கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், இந்த அத்துமீறல் சூரிக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது அவரது பெயரை பயன்படுத்தி நடத்தப்படுகிறதா என்பது பற்றி தெரியவில்லை. எனினும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.