சினிமாவில் தனது வட்டார வழக்காலும், காமெடியாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் இமான் அண்ணாச்சி தனது திருமண வாழ்க்கை பற்றி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
பெண் பார்க்க சென்ற கதை
அதில் பேசிய அவர், “நான் திருமணமே வேண்டாம் என சொல்லி வந்தேன். என்னை பொண்ணு பார்க்க போகிறோம் என சொல்லாமல் என்னுடைய அண்ணன் ஒருவர் சார் ஒருவரிடம் பணம் கொடுக்க வேண்டும் என பெண் பார்க்க வீட்டுக்கு அழைத்து சென்றார். என் மனைவியின் அப்பா தலைமையாசிரியர், அம்மா ஆசிரியை என்பதால் அனைவருக்கும் தெரியும். நானும் மரியாதை நிமித்தமாக அவர்களுக்கு வணக்கம் சொன்னேன். உள்ளே என் மனைவியும், அவரின் சகோதரியும் நிற்கிறார்கள். இருவரும் இரட்டையர்கள்.
நான் உள்ளே வந்ததும் என் மனைவி ப்ரிட்ஜ் பின்னால் சென்று ஒளிந்து கொண்டார். நான் என்னவென்று கேட்க, யாரையும் பார்த்தா அதிகமா பேசமாட்டாங்கன்னு என மனைவி குடும்பத்தினர் சொன்னார்கள். பின்னர் அங்கிருந்து சென்றவுடன் என் அண்ணன் அவரின் குடும்பத்தினர் பற்றி விசாரித்தார். எங்கள் வீட்டில் என்னைச் சேர்த்து 4 பேரும் ஆண் பிள்ளைகளாக இருந்தனர். அதனால் கல்யாணமானால் 4 பெண் பிள்ளைகள் இருக்க வேண்டும் என விருப்பப்பட்டேன்.
வீட்டுக்கு வந்ததும் இன்னொரு அண்ணன் சார் வீட்டுக்கு போனது பற்றி விசாரித்தார். நானும் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த ப்ரிட்ஜ் பின்னால் சென்று ஒளிந்த பெண்ணை தான் உனக்கு பார்த்திருக்கிறோம் என சொன்னார். ஆனால் நான் பெண் வேண்டாம் என சொல்லி விட்டேன். மனைவி குடும்பம் வசதியானது. ஆசிரியர்கள் என்ற நிலையில் 4 மகளையும் பார்த்து பார்த்து வளர்த்திருப்பார்கள் என வேண்டாம் என மறுத்தேன். ஆனால் குடும்பத்தினர் விடவே இல்லை.
இதனைத் தொடர்ந்து பேசிய இமான் அண்ணாச்சியின் மனைவி ஆக்னஸ் பிரியா, ‘என்னை சென்னைக்கு வர சம்மதமா என கேட்டார்கள். ஒரு சில கஷ்டங்கள் இருக்கும், சந்திக்க சம்மதமா? என கேட்டேன்.நான் ஓகே சொன்னதும், அவரும் சம்மதம் சொல்லிவிட்டேன். அவர் இந்த இடத்தை அடைய பட்ட கஷ்டங்கள் ஏராளம். ஊர்க்கு போய் விடும் எண்ணம் வரவில்லை’ என தெரிவித்தார்.
நகையை விற்ற இமான் அண்ணாச்சி
பின்னர் பேசிய இமான் அண்ணாச்சி, ‘எனக்கு 32 வயதில் திருமணம் நடைபெற்றது. அதுவரை என்னிடம் ஒரு பொட்டு தங்கம் கூட கிடையாது. மாப்பிள்ளை சீர் என்ற பெயரில் நகை போட்டார்கள். 25 பவுன், 35 ஆயிரம் ரொக்கம் கொடுத்தார்கள். நான் வேண்டாம் என சொன்னாலும் மனைவி குடும்பத்தில் கொடுத்தார்கள்’ என சொன்னார்.
இதனையடுத்து பேசிய ஆக்னஸ், “ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் அந்த நகையை தான் அடகு வைத்தோம். கலக்கப்போவது யாரு, சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே, குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சிக்கு அப்புறம் தான் எல்லாம் மாறிப்போச்சு. நான் பக்கத்து வீட்டில் டிவி பார்க்க சென்றேன். ஆனால் அவர்கள் டிவி பார்க்க வரக்கூடாது என ஒருமாதிரி பேசினார்கள். அதனால் என் வீட்டில் அவருக்கு போட்ட செயினை அடகு வைத்து அன்னைக்கு சாயங்காலமே டிவி வாங்கிவிட்டேன். அப்ப அந்த சம்பவம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எங்க வீட்டுல நான் கஷ்டத்தை அனுபவித்தது கிடையாது. ரொம்ப வசதியா இருந்தோம். ஆனால் டிவி கூட பார்க்க பக்கத்து வீட்டுல விட மாட்டுக்காங்கன்னு வருத்தமா இருந்துச்சு’ என தெரிவித்தார்.