விரைவில் வெளியாகவுள்ள ‘கோப்ரா’


பிரபல நடிகர் விக்ரம்மின் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘கோப்ரா’. படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே ஜி எஃப் ஹீரோயின், ஸ்ரீநிதி ஷெட்டி, டிக் டாக் மூலம் பிரபலமான மிரினாலினி ரவி ஆகியோர் இடம் பெற்றுள்ளதால் படத்தின் ரிலீஸிற்காக அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். நயன்தாராவை வைத்து ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.


 



விக்ரம்-ஸ்ரீநிதி ஷெட்டி


ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான ‘தும்பி துள்ளள்ளோ’ பாடல் ஏற்கனவே ஹிட் அடித்து பல மில்லியன் வியூஸ்களை கடந்து போய்க்கொண்டிருக்கின்றது. படத்தின் டீசர் ஒரு வருடத்திற்கு முன்னரே வெளியிடப்பட்டு எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்தது. படப்பிடிப்பு முடிந்து பல நாட்களாக ஆன நிலையிலும், படத்தின் ரிலீஸ் டேட் தள்ளிப்போய்க் கொண்டேயிருந்தது. போதாக்குறைக்கு “குறுக்க இந்த கவுசிக் வந்தா..” என்பது போல கொரோனா லாக்டவுன் வரவே, ரிலீஸ் குறித்து ‘பேச்-மூச்’ விடவில்லை படக்குழு. 






இதையடுத்து, கொரோனா அலை சற்று ஓய்ந்த நிலையில், படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள்  “வலிமை அப்டேட் ..வலிமை அப்டேட்” என  வலிமை படக்குழுவை தொல்லை செய்தது போல கோப்ரா குழுவையும் துரத்த ஆரம்பித்தனர். இதோ, அதோ என படக்குழு போக்கு காட்டிய படக்குழு, ஒரு வழியாக, ஆகஸ்ட் 31-ஆம் தேதி படம் வெளியிடப்படும் என அறிவித்தது. 


அதிகாலை 4 மணி ‘ஷோ’


படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே கோப்ரா படம் வெளியாகவுள்ளதால், படத்திற்கு 4 மணி காட்சி கொடுக்கப்பட்டிருக்கலாம் என பேசப்படுகிறது. இருந்தாலும், முன்னனி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ ’ படத்திற்கும், அதற்கு முன்னர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியனா ‘விருமன்’ படத்திற்கும் 4 மணி காட்சிகள் வழங்கப்படவில்லை என கோலிவுட் வட்டாரங்களில் சலசலப்புகள் எழுந்துள்ளது. அதே நேரம் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான  ‘லைகர்’ படத்திற்கு 4  மணிகாட்சி கொடுக்கப்பட்டது. இவ்வளவு நாள் இழுத்தடித்து, பல இன்னல்களுக்கு பிறகு பலத்த எதிர்ப்பார்புகளுக்கிடையே உருவாகியுள்ள கோப்ரா, ரசிகர்களை ஏமாற்றிவிடுமோ என்ற சந்தேகமும் ஒரு சிலருக்கு எழுந்துள்ளது. 


 



பல தோற்றங்களில் நடிகர் விக்ரம்!


நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி உள்ளிட்டோர் சமீபத்தில் மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று படத்தின் ‘ப்ரமோஷன்’ நிகழ்ச்சிளில் கலந்து கொண்டனர். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் விக்ரமின் படம் என்பதாலும், நீண்ட நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு படம் வெளியிடப்படுவதாலும், படத்தின் மேல் ரசிகர்களுக்கு உள்ள எதிர்ப்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. இந்த எதிர்ப்பார்ப்புகளை கோப்ரா பூர்த்தி செய்யுமா, இல்லையா என்பது படத்தின் ரலீஸிற்கு பிறகு தான் தெரிய வரும்!