விக்ரம் நடிப்பில் நாளை விநாயகர் சதுர்த்தி வெளியீடாக ரிலீஸ் ஆகவிருக்கும் கோப்ரா படத்தின் ஓப்பனிங் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் மகான் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் கோப்ரா படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
கோப்ரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 2 முறை படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போன நிலையில் தற்போது நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி கோப்ரா வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓப்பனிங் எப்படி இருக்கும்?
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உருவான் படம் கோப்ரா. கொரோனா லாக்டவுனால் தள்ளிப்போன படங்களில் கோப்ராவும் ஒன்று. இந்த ஆண்டு பிப்ரவரியில் தான் படப்பிடிப்பே நிறைவடைந்தது. நாளை ரிலீஸ் என்ற நிலையில் ட்ரெய்லருக்கே அமோக வரவேற்பு கிடைத்ததால் படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும் என்றே பேசிக் கொள்ளப்படுகிறது.
ப்ரீ புக்கிங் நிலவரத்தைப் பார்த்தால் விநாயகர் சதுர்த்தி நாளில் ஹவுஸ்ஃபுல் அளவுக்கு டிக்கெட்டுகள் புக் ஆகியுள்ளன. கோப்ரா போன்ற பெரிய பட்ஜெட் படத்திற்கு இந்த மாதிரியான ஓப்பனிங் நல்லதே.
சென்னையின் வெற்றி திரையரங்குகள் உரிமையாளர் ராகேஷ் கவுதமன் , நாளை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் நன்றாக புக் ஆகியுள்ளது. வியாழன், வெள்ளிக்கிழமை காட்சிகளுக்கு இன்னும் பெரிய அளவில் புக்கிங் வரவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு நாளை வரும் விமர்சனங்களைப் பொறுத்தே வீக்கெண்ட் புக்கிங்கை எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.
மூன்றாண்டுகளுக்குப் பின்னர் கோப்ரா விக்ரமுக்கு தியேட்டர் ரிலீஸ் படம். இதற்கு முன்னதாக 2019ல் கடாரம் கொண்டான் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் அது பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதேபோல் கடைசியாக ஓடிடியில் மஹான் வெளியானது. மகன் துருவ் விக்ரமுடன் அதில் அவர் நடித்திருந்தார்.
கோப்ரா தான் விக்ரமின் கம் பேக் மூவியாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் பேசிக் கொள்கின்றனர். கோலிவுட் வட்டாரமும் அப்படித்தான் பேசிக் கொள்கிறது. காரணாம் ட்ரெய்லர் மாஸ் ரீச் ஆகியுள்ளது.
தலைகீழாக விக்ரம் தொங்கும் காட்சியும் பல கெட்டப் அப்களில் அவர் தோன்றும் ஃப்ரேம்களும் கோப்ரா மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.