பிரபல கமர்ஷியல் இயக்குநரான சுராஜ், அப்பாடக்கர் படத்தின் தான் செய்த தவறு என்ன என்பதை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.
கடந்த 2015ம் ஆண்டு ரவி மோகன், அஞ்சலி, த்ரிஷா, விவேக், சூரி,பிரபு உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “சகலகலா வல்லவன் அப்பாடக்கர்”. தமன் இசையமைத்த இந்த படத்தை சுராஜ் இயக்கியிருந்தார். தலைநகரம், மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை என தொடர்ச்சியாக கமர்ஷியல் படங்களை இயக்கிய சுராஜின் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இப்படம் பெரிய அளவில் செல்லவில்லை.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுராஜ், “சகலகலா வல்லவன் அப்பாடக்கர் படத்தின் ஒரு வருத்தம் எனக்கு உண்டு. அதாவது தவறான நட்சத்திரங்கள் தேர்வு ஒரு படத்தை ஜெயிக்க வைக்காது என்பது எனக்கு புரிந்தது. அந்த படத்திற்கு முதலில் ஹீரோவாக தனுஷ் தான் முடிவு செய்யப்பட்டார். அதாவது ஒரு படிக்காத பையன், அவர் இருக்கும் கிராமத்தில் தன்னுடைய தகுதிக்கு ஏற்ற மாதிரி ஒரு பெண்ணை லவ் பண்றான். திடீர்ன்னு த்ரிஷா மாதிரி ஒரு பொண்ணு வர்றா. அப்ப ஹீரோவோட அப்பா அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். கல்யாணமும் நடக்குது. ஆனால் அந்த பெண்ணுக்கு இவனைப் பார்த்தாலே பிடிக்காது. படத்தின் இரண்டாம் பாதியை இரு மலர்கள் போல பண்ணலாம் என முடிவு செய்தோம்.
அந்த நேரம் பார்த்து நானும், தனுஷூம் படம் பண்ண முடியாத சூழல் ஏற்பட்டது. வேறொரு காரணமாக தனுஷ் இன்னொரு படம் பண்ண வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் 6 மாதம் சும்மா இருக்க வேண்டிய நிலை இருக்கும் என்பதால் ஒருநாள் ஜெயம் ரவியைப் பார்த்து நான் இந்த கதையை சொன்னேன். அவருக்கு கதை ரொம்ப பிடித்திருந்தது. படமும் எடுத்தோம். இந்த படத்தில் என்ன தப்பு நடந்தது எனக் கேட்டால், ஜெயம் ரவி போன்ற ஒரு அழகான பையனை எந்த பெண் தான் வெறுப்பாள். தனுஷ் மாதிரி ஆளாக இருந்தால் அந்த கேரக்டருக்கு செட் ஆகியிருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.