தெலுங்கு திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்து பிரபலம் அடைந்தவர் தில் ராஜூ. இவரது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பல பிரபலமான படங்களைத் தயாரித்துள்ளது. ஒரு சில படங்கள் தேசிய விருதையும் வென்றுள்ளது. சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருந்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
கேம் சேஞ்சர் தயாரித்தது என் தவறு
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "கேம் சேஞ்சர் படத்தைத் தயாரித்தது தவறான முடிவு. பெரிய இயக்குநர் படத்தை தயாரிக்கும் போது சில அக்ரீமண்டுகளை போட்டிருக்க வேண்டும். இதுபோன்ற படங்களை தயாரிக்கும்போது 100 % பிரச்னைகள் வரும். எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் இது நடக்கும். ஏதாவது தவறு நடக்கும். அதை தடுக்கும் போது 100 % தயாரிப்பாளரின் பொறுப்பு. அதை செய்யாமல் விட்டது என் தோல்விதான் என அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜயை தில் ராஜூ பெருமையாக பாராட்டி பேசியது வைரலாகி வருகிறது.
வாரிசு படம் தயாரிப்பு
தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்த தில் ராஜூ, முதல் முறையாக வாரிசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். இப்படம் தெலுங்கு, தமிழ் மொழிகளில் ஒரே நாளில் வெளியானது. மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, வாரிசு படத்தில் பாட்டு வேண்டுமா பாட்டு இருக்கு, பைட்டு வேண்டுமா பைட்டு இருக்கு, ரொமான்ஸ் வேண்டுமா அதுவும் இருக்கு என கூறினார். இவரது பேச்சு ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறியது. இதனை இமிடேட் செய்து நடிகர் சிரஞ்சீவியும் பேசியிருந்தார்.
விஜயை பாராட்டிய தில் ராஜூ
கேம் சேஞ்சர் படத்தால் பெரும் நஷ்டம் அடைந்திருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு நடிகர் விஜயை நல்லவிதமாக பாராட்டி பேசினார். அவர் கூறியதாவது, நடிகர் விஜய் பின்பற்றும் விதியால் தயாரிப்பாளர்களுக்கு பொக்கிஷமாக இருக்கிறது. அவர் ஒரு படத்திற்கு 6 மாதம் கால்ஷூட் ஒதுக்குகிறார். ஒரு மாதத்தில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. 120 நாளில் படப்பிடிப்பு முடிந்ததும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடக்க வசதியாக இருக்கிறது. ஆனால், தெலுங்கு திரையுலகில் அப்படி இல்லை. மிகவும் மோசமாக சிதைந்து கிடக்கிறது என தில் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும், நடிகராக விஜய் தயாரிப்பாளரின் நடிகராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.