சினிமா காதலர்கள் தினத்தில் ரூ.99க்கு தங்களது திரையரங்குகளில் திரைப்படங்களை காணலாம் என பி.வி.ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சினிமாவையும், பொதுமக்களை இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் பிரிக்க முடியாது. புதுப்படமாக இருந்தாலும், பழைய படத்தை ரீ-ரிலீஸ் செய்தாலும் திரையரங்கில் பார்க்கும் அனுபவமே தனிரகம்தான். இதனால் சில நேரங்களில் ரசிகர்களை கவரும் வண்ணம் டிக்கெட் விலையில் தள்ளுபடி, பெண்களுக்கு கட்டணக்குறைவு என உத்திகளை தியேட்டர் அதிபர்கள் கையாள்வார்கள். சென்னையை பொறுத்தவரை சில திரையங்குகளில் வாரத்தில் ஒருநாள் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பல்வேறு நாடுகளில் தேசிய சினிமா தினம் கொண்டாப்படுவது போல இந்தியாவிலும் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அதனை பின்பற்ற மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா திட்டமிட்டது. அன்றைய தினம் இந்தியா முழுவதும் சுமார் 4 ஆயிரம் திரையரங்குகளில் ரூ.75-க்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் தியேட்டர்களுக்கு வராமல் ஓடிடி தளங்களை தேடிச்சென்ற மக்களை மீண்டும் தியேட்டருக்கு கொண்டு வர இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
ஆனால் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா உறுப்பினராக இல்லை என்றும், அதனால் இந்த கட்டண சலுகை தமிழ்நாடு தியேட்டர்களுக்கு பொருந்தாது என்றும் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் பிவிஆர் நிறுவனம் சினிமா காதலர்கள் தினம் ஜனவரி 20-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தங்களது திரையரங்குகளில் அன்றைய தினம் ரூ.99-க்கு திரைப்படங்களைப் பார்க்க முடியும் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அவதார்: தி வே ஆஃப் வாட்டர், வாரிசு, துணிவு ஆகிய படங்களையும், பிற மொழி படங்களையும் எந்த காட்சிகள் வேண்டுமானாலும் நாம் குறைந்த விலையில் காணலாம்.
இதுதொடர்பாக பிவிஆர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சண்டிகர், பதான்கோட், பாண்டிச்சேரி ஆகிய நகரங்களில் இத்திட்டம் அமலில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐமேக்ஸ், 4டிஎக்ஸ் போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட திரையரங்குகள் இதில் வராது எனவும் கூறப்பட்டுள்ளது.