மோடியாக நடிக்க ரெடி.. படத்தை இயக்க வெற்றிமாறன், பா.ரஞ்சித் ரெடியா? - சத்யராஜ்


பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தன்னிடம் எவரும் அணுகவில்லை என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் சத்யராஜ் இணைந்து நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சத்யராஜ், பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்றால் என் நண்பர் மணிவண்ணன் இயக்கினால் அருமையாக இருக்கும், மோடி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க என்னிடம் யாரும் கேட்கவில்லை. மாரி செல்வராஜ் , பா.ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இயக்கினாலும் இப்படம் அருமையாக இருக்கும்” எனப் பேசியுள்ளார். 


“அண்ணா..நோ கமெண்ட்ஸ்'' ; மோடி, இளையராஜா பற்றிய கேள்வியை தவிர்த்த ரஜினி!


வேட்டையன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ரஜினிகாந்த் தன் அடுத்த ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.  “ஒவ்வொரு ஆண்டும் இமயமலை செல்கிறேன். இந்த முறை அங்கு சென்று விட்டு கேதர்நாத், பாபாஜி குகை எல்லாம் செல்ல உள்ளேன்” என்றார். அப்போது தமிழ் சினிமாவில் இசையா  கவிதையா என்ற பிரச்னை போய்க் கொண்டிருக்கிறதே” என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அண்ணா நோ கமெண்ட்ஸ்”  எனப் பேசி விடைபெற்றார்.


போடு.. இயக்குநராகக் களமிறங்கும் சூரி.. யாரோட வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்கிறார் தெரியுமா?


காமெடி நடிகராக தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கி இன்று ஹீரோவாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் சூரி, அடுத்து இயக்குநராகக் களமிறங்க இருக்கிறார். இது குறித்து சமீபத்தில் பேசியுள்ள சூரி, தனது அப்பாவின் வாழ்க்கையை ஒரு முழு படமாக எடுக்க இருப்பதாகவும் அதற்கான திரைக்கதையை தான் தயார் செய்துவிட்டதாகவும் சூரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த கதையை இயக்குநர் வெற்றிமாறனிடம் 2 மணிநேரம் சொல்லி இருப்பதாக சூரி தெரிவித்துள்ளார்.


"சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி” - ராஷ்மிகாவின் துள்ளல் நடனத்தில் புஷ்பா 2 பாடல்!


கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த புஷ்பா படத்தின் 2ஆம் பாகம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடலான கப்பிள் பாடல் இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ரேயா கோஷால் இந்தப் பாடலை ஆறு மொழிகளில் பாடியுள்ள நிலையில் இந்தப் பாடல் வரவேற்பைப் பெற்று வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் முதல் பாகத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்ற நிலையில் இந்த பாகத்தின் பாடல்களும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.