”கெட்டவங்களுக்கு மிக மோசமான வில்லன்” - இந்தியன் தாத்தா ரீஎண்ட்ரிக்கு செம ஹைப் கொடுத்த ஷங்கர்!


இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. கமல்ஹாசனுடன் 28 ஆண்டுகள் கழித்து ஷங்கர் இணைந்துள்ள நிலையில், இப்படம் பற்றி பேசிய அவர், இந்தியன் படம் வந்து  7 ,8 ஆண்டுகளுக்கு பிறகும் பத்திரிகைகளில் லஞ்சம் ஊழல் பற்றிய செய்திகளை பார்த்தேன். இந்த மாதிரியான ஒரு சூழலில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். 2.0 படம் முடித்ததும் எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது. இந்தியன் தாத்தா நல்லவர்களுக்கு தான் நல்லவர். கெட்டவர்களுக்கு ரொம்ப மோசமான வில்லன்" எனப் பேசியுள்ளார்.


இந்தியன் 2 படத்துக்கு நடுவில் வந்த சோதனைகள்.. மனம் திறந்த கமல்ஹாசன்


இந்தியன் 2 விழாவில் பேசிய கமல்ஹாசன், இந்தியன் 2 படம் கடந்து வந்த பாதை, தன் திரை அனுபவம் உள்ளிட்டவை குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பேசிய கமல், “சிவாஜிதான் என்னை ஷங்கர் படத்தில் நடிக்கச் சொன்னார். சிவாஜி சார் இல்லை என்றால் நான் இன்று இந்த மேடையில் இல்லை. நான் தமிழன். நான் இந்தியன் என்பதே எனது அடையாளம். இந்தப் படத்துக்கு நடுவுல எக்கச்சக்க சோதனைகள் இருந்தது. இந்தப் படத்தில் வேலை பார்த்த என்னுடைய நண்பர் இறந்துவிட்டார். எல்லா பிரச்சனைகளையும் கடந்து இன்னைக்கு இங்க வந்து நிக்குறதுல எனக்கு சந்தோஷம்” எனப் பேசியுள்ளார்.


“பிறந்தநாள் கொண்டாட்டம் உங்களுக்காகத்தான்; எனக்கு இல்லை” - மகளை நினைவுகூர்ந்த இளையராஜா


இசையமைப்பாளர் இளையராஜா இன்று தன் 81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒருவராக இசைஞானியாக உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களால் சொந்தம் கொண்டாடப்படும் இளையராஜாவுக்கு உலகம் முழுவதுமிருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, இந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீங்கள் தான் எனக்கு சொல்லுகிறீர்கள். நான் எனது மகளை பறிகொடுத்ததால் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. உங்களுக்காகத்தான் இந்த கொண்டாட்டம்” எனப் பேசியுள்ளார்.


பெண்கள் மீது மோதிய கார்! சுற்றி வளைத்த பொதுமக்கள்! கேஜிஎஃப் நடிகைக்கு செம அடி!


தமிழ் சினிமாவில் ஆளவந்தான் மற்றும் சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை  ரவீனா டாண்டன். இவர் மீது மும்பை, பாந்திரா பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 1ஆம் தேதி இரவு மும்பை,  பாந்த்ரா பகுதியில் உள்ள கார்ட்டர் சாலையில்  ரவீனா டாண்டனின் கார் ஓட்டுநர், வேகமாக ஓட்டிச் சென்று சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று பெண்களின் மீது மோதியதாக கூறப்படுகிறது. வாகனத்தில் இருந்து இறங்கி வந்த நடிகை ரவீனா,  அப்பெண்களுடன் தன் ஓட்டுநருக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களைத்  தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து   ஆக்ரோஷமடைந்த அங்கிருந்த நபர்கள் ரவீனா டாண்டனை தாக்கியதாக பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.