இந்த ஆண்டின் அதிவேக 50 கோடி வசூல்...மகாராஜா பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான மகாராஜா திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு புத்துணர்ச்சி அளித்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களையும், வன்முறைக் காட்சிகள் மற்றும் யு/ஏ சான்றிதழ் ஆகிய காரணங்களுக்காக நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி மகாராஜா திரைப்படம் வசூலில் சாதனை படைத்து ரூ.50 கோடிகளுக்கு மேல் குவித்துள்ளது. இதுவரை 55.8 கோடிகளை உலக அளவில் வசூலித்துள்ள இந்தப் படம் இந்த ஆண்டில் அதிவேகமாக 50 கோடிகளை வசூலித்த தமிழ் படமாக உருவெடுத்துள்ளது.
பிறந்தநாள் ஸ்பெஷல்: வெளியானது தி கோட் படத்தில் விஜய் பாடிய இரண்டாவது பாடல் அறிவிப்பு
நாளை நடிகர் விஜய் தன் 50வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சின்ன சின்ன கண்கள் என்கிற இந்தப் பாடலை யுவன் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியாகிய விசில் போடு பாடலை நடிகர் விஜய் பாடியிருந்த நிலையில் இது அவருடைய குரலில் வெளியாகும் இரண்டாம் பாடல் ஆகும். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தி கோட் படத்தின் அப்டேட் வெளியாவதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன் இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய மரணம்! விஷச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகம் - நடிகர் சூர்யா கடும் கண்டனம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா தனது இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும். சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்” எனத் தெரிவித்துள்ளார்.
யாருமே செய்யாத ஒன்றை செய்திருக்கிறோம்... கல்கி படத்தில் தனது கேரக்டர் பற்றி கமல்
கமல்ஹாசன், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ள கல்கி 2898 படம் வரும் ஜூன் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முன்னதாக படம் ரிலீஸை நெருங்கும் நிலையில் படக்குழுவினர் மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், எனக்கு எப்போதும் வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற அசை இருந்திருக்கிறது. இந்தப் படத்தில் நாக் அஸ்வின் எனக்கு வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். நான் ஒரு முனிவர் மாதிரி தான் இந்தப் படத்தில் இருக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.