விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவு


மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டமாக அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். த்ரிஷா , அர்ஜூன் , ஆரவ் மற்றும் ரெஜினா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் தொடங்கிய விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில் அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.


ரஜினியின் இந்தியன் 2 விமர்சனம்


கமலின் இந்தியன் 2 படத்தை விரைவில் பார்க்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சென்ற வாரம் தெரிவித்திருந்தார். இன்று கேரளத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்தியன் 2 படம் எப்படி இருந்தது என்கிற கேள்விக்கு நல்லா இருந்தது என்று ரஜினி பதிலளித்துள்ளார்.


அந்தகன் பாடலை வெளியிடும் விஜய்


பிரசாந்த் நடித்து தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அந்தகன் படத்தின் முதல் பாடலை தி கோட் பட நடிகர் விஜய் வெளியிட இருக்கிறார். அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார்கள். பிரபுதேவா இந்தப் பாடலை இயக்கியுள்ளார்.


இந்தியன் 2 அனிருத் சம்பளம்


இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். சமீபத்தில் வெளியான கமலின் இந்தியன் 2 படத்திற்கு இவர் இசையமைத்திருந்தார். முன்னதாக இந்தியில் வெளியான ஜவான் படத்திற்கு அனிருத் 10 கோடி ரூபாயும் விஜயின் லியோ படத்திற்கு 8 கோடி ரூபாயும் சம்பளமாக பெற்றிருந்தார். தற்போது இந்தியன் 2 படத்திற்கு அவர் 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் இவ்வளவு அதிகம் சம்பளம் வாங்கிய முதல் இசையமைப்பாளராக அனிருத் சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.


கிறிஸ்துமஸ் வெளியாகும் ஷங்கரின் கேம் சேஞ்சர்


ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம் கேம் சேஞ்சர். கியாரா அத்வானி , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் இந்திய 2 படம் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக கேம் சேஞ்சர் படம் திரைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.