ஷோபிதா நாக சைதன்யா நிச்சயதார்த்தம்


டோலிவுட் திரையுலகின் ரோமியோவாக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இணைந்து நடித்த போது சமந்தாவுடன் ஏற்பட்ட காதல் இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மிகவும் கியூட் காதல் ஜோடியாக வலம் வந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற போவதாக கடந்த 2021ம் ஆண்டு சோசியல் மீடியா மூலம் அறிக்கையாக வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து நடிகர் நாக சைதன்யா நடிகை ஷோபிதாவை காதலித்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இன்று நடிகர் நாகசைதன்யாவின் இல்லத்தில் அவருக்கும் ஷோபிதாவுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றது. இந்த புதிய தம்பதியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


ஃபகத் ஃபாசில் வேட்டையன் லுக்


மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாசில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களாலும் கொண்டாடப் படும் நடிகர் ஃபகத் ஃபாசில். சமீபத்தில் வெளியான அவேஷம் படம் இந்தியளவில் 100 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது குறிப்பிடத் தக்கது. ஃபகத் ஃபாசிலை பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் படங்களின் சிறப்பு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக ரஜினியின் வேட்டையன் படத்தில் ஃபகத் ஃபாசிலின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியது . இதனைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்து வரும் புஷ்பா 2 படத்தின் போஸ்டர் வெளியானது. 


ஹாட்ஸ்டாரின் வெளியாகும் கனா காணும் காலங்கள்


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் கனா காணும் காலங்கள். இளைஞர்களை மையப் படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடர் இன்றும் 90ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கனா காணும் காலங்கள் தொடரின் முதல் இரண்டு சீசன்கள் டிஸ்னி- ஹாட்ஸ்டாரில் அமோக வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. முதல் இரண்டு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து,  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ​​'கனா காணும் காலங்கள்' சீரிஸின் அடுத்த சீசன் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு த்றபோது வெளியாகியுள்ளது.  


வினேஷ் போகத்திற்கு  நடிகைகள்  ஆதரவு


மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஒட்டுமொத்த நாடே ஆதரவு தெரிவித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பல நடிகைகள் அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகை நயன்தாரா வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீங்கள் பலரை ஊக்குவிக்கிறீர்கள் வினேஷ். உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளவிடப்படுவதில்லை. எந்த சாதனையையும் மிஞ்சும் ஆழமான அன்பை நீங்கள் பெரிய பரிசாகப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் தலை நிமிர்ந்து நடங்கள்” என பதிவிட்டுள்ளார்.