ராகுல் ரவீந்தர் - சின்மயி தம்பதியினருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. ஆனால் அவர் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக இப்போது இணையவாசிகள் சர்ச்சைகளைக் கிளப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பாடகி சின்மயி அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் கர்ப்பமடைந்ததை ஏன் பொது வெளியில் தெரிவிக்கவில்லை. ஏன் ஃபோட்டோஷூட் நடத்தி பகிரவில்லை எனக் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நான் கர்ப்பமாக இருப்பது எனது தனிப்பட்ட வாழ்க்கையின் நிகழ்வு. நான் ஏன் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நான் எதற்காக ஃபோட்டோக்கள் பகிர வேண்டும். என் கர்ப்பம் பற்றிய தகவல் எனது குடும்பத்துக்கும், எனது நண்பர்களுக்கும் மட்டும் தானே தெரிய வேண்டும். அப்புறம் என்னைப் பற்றி வெளி உலகம் என்ன தெரிந்த கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அதைப் பற்றி மட்டும் தான் நான் வெளியில் சொல்வேன். நான் கர்ப்பமானதைப் பற்றி சொல்லாததால் என்னை என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். எனக்கு அதைப் பற்றி சிறிதும் கவலையில்லை.
அப்புறம் நான் இன்னொரு கேள்வியும் கேட்கிறேன். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது என்ன தவறா? உண்மையிலேயே நான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருந்தால் அதை வெளிப்படையாக சொல்லியிருப்பேன். எனக்கு அதில் தயக்கமும் இல்லை. எனக்கு பேறுகாலம் பார்த்த மருத்துவர் மணிப்ரியா அருணுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர் எனக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது பாட்டு பாடச் சொன்னார். நான் என்ன பாட்டு பாட என்று யோசித்தபோது எனக்கு ஒரு பஜனை தான் நினைவுக்கு வந்தது. அந்த பஜனையைப் பாடினேன். அது கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் பாடியுள்ளேன். எனக்கு ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளன. ஆண் குழந்தையின் பெயர் ஷ்ரவாஸ், பெண் குழந்தையின் பெயர் த்ருப்தா. இருவரும் நலமாக இருக்கின்றனர். என் குழந்தைகள் படங்களையும் நான் சமூக வலைதளங்களில் வெளியிட மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சின்மயியும் சர்ச்சைகளும்:
மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான சின்மயி தொடர்ந்து, பிரபல நடிகர்களின் படத்தில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் 'மாஸ்கோவின் காவிரி’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ராகுல் ரவீந்தரை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து மீ டு எனப்படும் பாலியல் தொடர்பான புகாரைத் தெரிவித்து திரையுலகைப் பரபரப்புக்குள்ளாக்கினார்.
கடந்த 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சிக்காக சென்ற போது அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என சின்மயி தெரிவித்திருந்தார். தொடர்ந்து திரைப் பிரபலங்கள் தொடங்கி பல்வேறு துறைகளிலும் பெண்களிடம் அத்துமீறும் ஆண்களுக்கு எதிராக சின்மயி குரல் எழுப்பியும் கண்டித்தும் வருகிறார். இதனிடையே ராகுல் ரவீந்தர் - சின்மயி தம்பதியினருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது.