கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி விக்ரம் நடித்த தங்கலான் , அருள்நிதி நடித்த டிமான்டி காலணி 2 மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. தங்கலான் படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு இருந்த நிலையில் டிமான்டி காலணி படமும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்ததை விட அதிக வசூலை ஈட்டி வருகிறது. கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக அப்படத்தின் வசூல் பின் தங்கியுள்ளது. 


தங்கலான்


பா ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் படத்தில்  விக்ரம் , பார்வதி திருவொத்து , மாளவிகா மோகனன் , பசுபதி  டேனியல் கேல்டகிரோன் , ஆனந்த் சாமி , ஹரி கிருஷ்ணன் , உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 18-ஆம் நூற்றாண்டில் கோலார் நிலப்பரப்பில் இருந்த தங்கத்தை எடுக்க அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களின் போராட்டங்களை மேஜிக்கல் ரியலிஸம் ஜானரில் உருவாக்கியுள்ளார் ரஞ்சித்.


தங்கலான் படம் முதல் நாளில் உலகளவில் 26 கோடி வசூல் செய்திருந்தது. வெளியாகிய நான்கு நாட்களில் தங்கலான் ரூ.43 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 


டிமாண்டி காலணி


2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் அறிவிப்பு வெளியாகி பின் நீண்ட நாட்களுக்குப் பின் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடைசியாக வெளியான கோப்ரா படம் பெரியளவில் தோல்வியடைந்தது.


இப்படியான நிலையில் வெளியான டிமாண்டி காலனி படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. முதல் பாகம் அளித்த அதே ஹாரர் ஃபீலை இந்த படத்திலும் தக்கவைத்துள்ளார்கள். மேலும் இப்படத்தின் வெற்றி நடிகை பிரியா பவானி சங்கருக்கு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. டிமாண்டி காலனி படம் 4 நாட்களில் 21 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 


ரகு தாத்தா


கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படத்தை சுமன் கோஷ் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக தி ஃபேமிலி மேன் , ஃபார்ஸி உள்ளிட்ட வேப் சீரிஸ்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் , ஆனந்த் சாமி , எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒரு எளிமையான பீரியட் காமெடி டிராமாக உருவாகி இருக்கும் இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றாலும் மற்ற இரண்டு படங்களுக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்ததால் பெரியளவில் கவனம் பெறாமல் போனது வருத்தம் தான்.