ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக வெளியானதற்கு தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் லீக் ஆனது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மொத்த திரைப்படத்தை இணையதளத்தில் வெளியானது படக்குழுவுக்கு மேலும் பேரிடியாக அமைந்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்த விஜய் அரசியலில் ஈடுபட்டதால், அவரின் கடைசி படமாக ஜனநாயகன் திரைக்கு வரவிருக்கிறது. தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் அப்படம் வெளியாகாமல் இருந்து வரும் நிலையில், படம் லீக்கானது கோலிவுட்டை மட்டுமில்லாமல் டோலிவுட்டையும் கதிகலங்க வைத்திருக்கிறது. இதுதொடர்பாக தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ஆதங்கத்தை கூறியுள்ளார்.
ஜன நாயகன் திரைப்படம் திருட்டுத்தனமாக இணையத்தில் கசிந்தது குறித்து மெகாஸ்டார் சிரஞ்சீவி கருத்து தெரிவித்துள்ளார். கோலிவுட் நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம், வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்தது குறித்து மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் தன்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக வெளியாகி இருப்பது கவலை அளிக்கிறது. சினிமா என்பது கடின உழைப்பு, பலரது கனவு, நம்பிக்கை ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டது. ஜனநாயகன் இணையத்தில் வெளியானது திரைத்துறையை சார்ந்த அனைவரையும் பாதிக்கிறது. திரைக்கலையை மதித்து பாதுகாப்பதை நாம் அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்வோம். இந்த இழப்பைத் தடுத்து, குற்றவாளிகளைத் தண்டிப்பதில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவளிக்கிறோம். அத்திரைப்படத்தை மதித்து, பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் ஆதரவளிப்போம்’ என்று கூறினார்.
