கோவாவில் தொடங்கியுள்ள சர்வதேச இந்திய திரைப்படத் திருவிழாவில் நடிகர் சிரஞ்சீவிக்கு நடப்பு ஆண்டின் சிறந்த இந்தியத் திரைப்பட ஆளுமைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவாவில் ஆண்டுதோறும்  நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்படத் திருவிழா ஆசியாவின் மிகப்பெரும் திரைப்படத் திருவிழாவாகும்.


இன்று தொடங்கியுள்ள இந்தத் திரைப்படத் திருவிழா வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், அமைச்சர் எல். முருகன், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்தனர்.


பாலிவுட் நடிகர், நடிகைகள் வருண் தவான், சாரா அலிகான் உள்ளிட்ட பலர் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


 






இந்நிலையில், நடப்பு ஆண்டின் சிறந்த இந்தியத் திரைப்பட ஆளுமை விருது நடிகர் சிரஞ்சீவிக்கு இந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது.


 






அனுராக் தாக்கூர் இது குறித்து ட்வீட் செய்துள்ள நிலையில், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக நடிகர், நடனக் கலைஞர், தயாரிப்பாளர் என 150 படங்களில் பணியாற்றி சிரஞ்சீவி புகழ் பெற்றுள்ளதாகவும், தன் அபாரமான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை வென்று தெலுங்கு சினிமாவில் பிரபலமாக விளங்குவதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.


தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் நடிகராகக் கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவி  நடிப்பில் முன்னதாக வெளியான காட்ஃபாதர் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அடுத்த ஆண்டு அவரது நடிப்பில் வால்டைர் வீரய்யா, போலா சங்கர் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.